மிக்ஜாம் புயல்..!! தமிழ்நாட்டிற்கு ரூ.276 கோடி ஒதுக்கீடு..!! கர்நாடகாவுக்கு இத்தனை கோடியா..? மத்திய அரசு ஒப்புதல்..!!
மிக்ஜாம் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் 3, 4 ஆம் தேதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழை விட்டு பல நாட்கள் ஆகியும், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் முழுமையாக வடியாததால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வந்து கொண்டிருந்த நிலையில், தென் மாவட்டங்களையும் மழை பதம் பார்த்துவிட்டது. டிசம்பர் 16, 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரம் உள்ள கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதற்கிடையே, மிக்ஜம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.6,000 நிவாரணம் ரொக்கமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் மற்றும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ரூ.276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பிற்காக ரூ.115.49 கோடியும், டிசம்பர் மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.276 கோடி ஒதுக்கீடு செய்த மத்திய அரசு, கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை வாரி வழங்கியுள்ளது.
Read More : திடீரென பூமிக்குள் புதைந்த 30 வீடுகள்..!! சாலைகள் கடும் சேதம்..!! அச்சத்தில் ஜம்மு காஷ்மீர்..!!