புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம்...! ஆட்சியர் அறிவிப்பு
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; உச்சநீதிமன்ற உத்திரவின்படி, குடும்ப அட்டை இல்லாத பதிவு செய்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் இஷ்ரம் (e-Shram Portal)-ல் பதிவு செய்துள்ள நபர்களில் சிலர் நீண்ட காலமாக குடும்பத்துடன் நிரந்தரமாக வசித்து வருகிறார்கள்.
ஒரே குடும்பத்திலுள்ள ஒரு சிலர் இங்கேயும், ஒரு சிலர் தான் சார்ந்த மாநிலத்திலும் வசித்து வருகிறார்கள். இதில் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இ-ஷ்ரம் (e-Shram Portal) -ல் பதிவு செய்துள்ள புலம் பெயர்ந்த தொழலாளர்களில் எந்த மாநிலத்திலும் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் குடும்ப அட்டை வழங்கிடவும் தற்காலிகமாக பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களது விவரங்களை முழுமையாக பெற்று அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கிட அவர் சார்ந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இ-ஷ்ரம் (e-Shram Portal)-ல் பதிவு செய்துள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் நீண்ட காலமாக தமிழ்நாட்டில் வசித்து வருபவர்களும், தற்காலிகமாக தமிழ்நாட்டில் வசித்து வருபவர்களும் உரிய படிவத்தினை பூர்த்தி செய்து தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் வட்ட வழங்கல் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.