கரையை நெருங்கும் மிக்ஜாம்!… புயல்களுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள் தெரியுமா?
வங்கக்கடலில் உருவாகியுள்ள, 'மிக்ஜாம்' புயல், இன்று சென்னை வழியே ஆந்திராவுக்கு செல்கிறது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், சூறாவளி காற்றுடன் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், 'ரெட் அலெர்ட்' விடப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இந்திய பெருங்கடல்களில் உருவாகும் புயல்களுக்கு எப்படி பெயர் வைக்கப்படுகிறது என்று தெரிந்துகொள்வோம்.
கடலில் உருவாகும் புயல்களுக்கு தனித்தனியாக பெயர் வைக்கும் பழக்கத்தை முதன்முதலில் ஆஸ்திரேலியாவும் பின்னர் அமெரிக்காவும் தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து பெயர்களை வைக்கும் முறை பின்பற்றுகிறன. அந்த வகையில் இந்தியப் பெருங்கடலில் உள்ள வங்கக் கடல், அரபிப் கடல்களில் உருவாகும் புயல்களுக்கு இந்த மண்டலத்தில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு,மியான்மர், ஓமன் மற்றும் தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் முதன்முறையாக 2004ம் ஆண்டில் அட்டவணையை தயாரித்தபோது இந்த எட்டு நாடுகள் சார்பில் தலா 8 பெயா்கள் வீதம் 64 பெயா்கள் வழங்கப்பட்டன.
இதில் 2004-ஆம் ஆண்டுக்குப் பிறகு வந்த புயல்களுக்கு பட்டியலிலிருந்த 63 பெயா்களும் வைக்கப்பட்ட்டு விட்டன. இந்நிலையில் புதியதாக இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் புயல்களுக்கு பெயரிட உலக வானிலை அமைப்பு (WMO) புதிய பெயர் பட்டியலை தயாரித்தது. இந்தப் புதிய பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு,மியான்மர், ஓமன், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சேர்த்து ஈரான், சவுதி அரேபியா, கத்தார், ஏமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஐந்து புதிய உறுப்பு நாடுகளும் பெயர்களை பரிந்துரைத்துள்ளன. இந்தப் பட்டியலில் 13 உறுப்பு நாடுகளுக்கு தலா 13 புயல் பெயர்கள் என மொத்தம் 169 பெயர்களை உலக வானிலை அமைப்பு வெளியிட்டது.
2020ஆம் ஆண்டில் இதை வைத்து, வட இந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு, அடுத்தடுத்து பெயர்கள் சூட்டப்படுகின்றன. அந்த வகையில், தற்போது வங்கக்கடலில் உருவாக உள்ள புயலுக்கு மியான்மர் பரிந்துரைத்த மிஷாங் (Michaung) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.இருப்பினும், இதை மிக்ஜாம் என்றே உச்சரிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது மியான்மர். இந்த மிக்ஜாமுக்குப் பிறகு, எந்த புயல் வந்தாலும் அதற்கு ஓமன் நாடு பரிந்துரைத்த ரெமல் (Remal) என்ற பெயரும், அதற்கடுத்து வரும் புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்த அஸ்னா என்ற பெயரும் சூட்டப்படும்.இந்த வகையில், இன்னும் சுமார் 150 புயல்களுக்கு பெயர் பட்டியலை தயாராக வைத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். 169 பெயர்கள் கொண்ட பட்டியலில் 28-வது இடத்தில் 'முரசு' எனும் பெயரும், 93-வது இடத்தில் நீர் என்ற பெயரும் தமிழ் பெயர்கள் ஆகும். அடுத்து வரும் புயலுக்கு தமிழ்ப் பெயர் வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.