மாணவர்களுக்கு மதிய உணவு & சீருடை... பெற்றோர்கள் ஒப்புதல் அவசியம்...! பள்ளி கல்வித்துறை உத்தரவு
மாணவர்களுக்கு மதிய உணவு மற்றும் சீருடை தேவை குறித்து பெற்றோர்களிடம் உரிய ஒப்புதலை பெற பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; 2024-25ம் கல்வியாண்டில் அரசு (நகராட்சி / மாநகராட்சி / ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை / வனத்துறை / பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கள்ளர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசுப் பள்ளிகள்), அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கு மதிய உணவு மற்றும் சீருடை தேவை குறித்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பள்ளி வாரியாக உரிய விவரங்களை பதிவு செய்து அனுப்பி வைத்திட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மாணவ, மாணவியர்களின் பெற்றோர்களிடம் இப்பொருள் சார்ந்து விருப்பம் குறித்து ஏற்கனவே கருத்துக்கள் பெறப்பட்டு அதனடிப்படையில் விவரங்கள் தொகுக்கப்பட்டு வரும் நிலையில், விடுபட்ட பெற்றோர்களிடம் உரிய ஒப்புதலை சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பெற்று அவ்விவரங்களை எதிர்வரும் 18.10.2024-க்குள் நிறைவு செய்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.