இந்தியாவின் சமூக ஊடக தளமான 'Koo' செயலி நிறுத்தம்!! - நிறுவனம் அறிவிப்பு
மைக்ரோ பிளாக்கிங் ஸ்டார்ட் அப் நிறுவனமான ‘கூ’ (Koo) நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் தனது சேவையை நிறுத்தப்போவதாக அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2021 வாக்கில் இந்தியாவில் எக்ஸ் தளத்துக்கு எதிரான கருத்துகள் வலுவாக எழுந்திருந்தது. அப்போது லைம்லைட்டுக்குள் வந்தது கூ. எக்ஸ் தளத்தை போலவே இதிலும் பயனர்கள் பதிவுகளை பகிரலாம். கடந்த 2022-ம் ஆண்டு இந்த தளத்தில் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. அந்த ஆண்டு ஜூலையில் 94 லட்சம் ஆக்டிவ் பயனர்களை ‘கூ’ கொண்டிருந்தது.
இந்த நிலையில், படிப்படியாக பயனர்களின் எண்ணிக்கை தொடர் சரிவை கண்டுள்ளது. மாதந்தோறும் இது குறைந்து கொண்டே வந்தது. இதனால் நிலையான வருவாயை அந்நிறுவனம் ஈட்ட தவறியது. இதனால், ஊழியர்களுக்கு ஏப்ரல் முதல் சம்பளம் வழங்கவில்லை. இதனை ‘கூ’ தரப்பும் உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘கூ’ சமூக வலைதளம் சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கடந்த 2022-ம் ஆம் ஆண்டு எக்ஸ் என்ற சமூக வலைதளத்திற்கு மாற்றாக தன்னை முன்னிறுத்தி கொண்ட ‘கூ’ என்ற நிறுவனம் தற்போது முதலீடு தொடர்பான சிக்கல் காரணமாக தனது சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர் அபர்மேய ராதாகிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகப்பெரிய இணையதள நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் வாய்ப்புகளை ஆராய்ந்தோம். ஆனால், பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டப்படவில்லை. ’கூ’ செயலி தொடர்ந்து செயல்பட பெரும் முதலீடு தேவைப்படுகிறது. ஆனால், அதற்கான வழிகள் ஏதுமில்லை. மிகவும் வருத்ததுடன் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்”என்று தெரிவித்துள்ளார்.
Read more | ‘நீட் தேர்வு-க்கு எதிரான விஜய்யின் குரல்’ அரசியல் கட்சியினரின் ஆதரவும்.. எதிர்ப்பும்!!