உஷார்!. தவறாக வழிகாட்டிய கூகுள் மேப்!. பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்த கார்!. 3 பேர் பலி!.
GPS Mishap: உத்தர பிரதேசத்தில் கூகுள் மேப் உதவியுடன் சென்றபோது, தவறான வழிகாட்டுதல் காரணமாக முழுமையடையாத பாலத்தில் இருந்து ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரியான பாதையை கண்டுபிடிக்கவும், குறுக்கு வழியை தெரிந்து கொள்ளவும், போக்குவரத்து நெரிசல்களை அறியவும் கூகுள் மேப் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமின்றி, காடுகள், நீர் நிலைகள், முக்கியமான இடங்கள், கடைகள், கோயில்கள், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் பங்குகள், சார்ஜிங் ஸ்டேஷன் போன்றவற்றை தெரிந்துக்கொள்ளவும் கூகுள் மேப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே இந்த மேப் தினமும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. புதியதாக இதில் சில அம்சங்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதாவது கூகுள் மேப்பை வைத்து நிலத்தின் உரிமையாளர்களையும் தெரிந்து கொள்ள முடியும். அதேபோல கடந்த கால வரைபடத்தையும், தற்போதைய கூகுள் மேப்பையும் வைத்துக்கொண்டு நீர் நிலைகள், காடுகளின் பரப்பளவு எந்த அளவுக்கு சுருங்கியிருக்கிறது என்பதையும் கண்டுபிடித்துவிட முடியும்.
ஆனால் இவை எல்லாவற்றிற்கும் ஹைலைட்டாக, வாகன ஓட்டிகளுக்குதான் கூகுள் மேப் பெரிதும் பயன்படுகிறது. இதிலும் சில சிக்கல்கள் இருக்கின்றன. சில நேரங்களில் மேப் தவறாக வழிகாட்டிவிடுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். அந்தவகையில், உத்தர பிரதேச மாநிலத்தில் கூகுள் மேம் உதவியுடன் சென்றபோது முழுமையடையாத பாலத்தில் இருந்து ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.
உத்தர பிரதேசத்தின் பரேலி பகுதியைச் சேர்ந்த மூவர், படவுன் மாவட்டம் தாடாகஞ்ச் பகுதிக்கு நேற்று காலை காரில் புறப்பட்டனர். வழி தெரியாது என்பதால் ஜி.பி.எஸ்., வரைபடத்தின் துணையுடன் பயணித்து உள்ளனர்.இவர்களது கார், நேற்று காலை 10:00 மணி அளவில் கரன்பூர் பகுதியில் உள்ள ராம்கங்கா ஆற்று பாலத்தில் சென்றது. அந்த பாலம் சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதியாக உடைந்திருந்தது. இது ஜி.பி.எஸ்.,சில் காட்டாததால், அந்த பாலத்தின் மீது வேகமாக சென்றனர்.
உடைந்த பாலத்தின் முடிவில் தடுப்புகள் ஏதும் இல்லாததால்,50 அடி உயரத்தில் இருந்து ராம்கங்கா ஆற்றுக்குள், கார் பாய்ந்தது. ஆற்றில் தண்ணீர் செல்லாததால் கீழே விழுந்ததில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணித்த மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இந்த சம்பவத்திற்கு பின், போலீசார் பாலத்தை மூடினர்.
Readmore: அதிர்ச்சி!. தரையிறங்கும்போது திடீரென தீப்பிடித்த விமானம்!. 95 பயணிகளின் நிலை என்ன?