அதிரடி...! எம்ஜிஆர் சத்துணவு திட்டம்.. 8,997 பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு உத்தரவு...!
சமூக நலத்துறை மூலம் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப அரசு உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின்கீழ், 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய வேளையில் கலவை சாதத்துடன், மசாலா முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட இத்திட்டம் அனைத்து மாநிலங்களாலும் பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 43131 சத்துணவு மையங்களில் ஒரு சத்துணவு மையத்திற்கு ஒரு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் என 3 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, சத்துணவுப் பணியாளர்கள் கீழ்கண்டவாறு சிறப்பு கலைமுறை ஊதியத்தின் கீழ் பணியாற்றி வருகிறார்கள்.
அமைப்பாளருக்கு 7700 ரூபாய் முதல் 24,200 வரை, சமையலருக்கு 4100 ரூபாய் முதல் 12500 வரை, சமையல் உதவியாளர் 3000 ரூபாய் முதல் 6000 வரை வழங்கப்படும். சத்துணவுத் திட்டத்தினை சீரிய முறையில் செயல்படுத்திட, தற்போது காலியாகவுள்ள மொத்த பணியிடங்களில், அவசர அவசியம் கருதி, 8.997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3000/- வீதம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட உரிய ஆணை வழங்குமாறு சமூக நல ஆணையர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூக நல ஆணையரின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டது. அதனடிப்படையில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் தொய்வின்றி நல்லமுறையில் செயல்பட இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள காலியாகவுள்ள பணியிடங்களுள் 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் ரூ.3000/- என்ற தொருப்பூதிய அடிப்படையில் நவம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரையிலான நான்கு மாதங்களுக்கான தொகை ரூ. 10.70,64,000/- (ரூபாய் பத்து கோடியே எழுபத்தொன்பது இலட்சத்து, அறுபத்து நான்காயிரம் மட்டும்) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.