Workplace செயலியை மொத்தமா மூடும் மெட்டா நிறுவனம்..!
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா தங்களுடைய வொர்க்பிளேஸ் செயலியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. உலகின் முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்துமே தற்போது செயற்கை நுண்ணறிவு பிரிவில் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றன. மெட்டா நிறுவனமும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பங்களுக்கு அதிக பட்ஜெட்டை ஒதுக்கியுள்ளது. எனவே மற்ற செலவினங்களையும் செயல்பாடுகளையும் குறைத்து கொள்ள மெட்டா முடிவெடுத்துள்ளது.
வொர்க்பிளேஸ் என்ற செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு மெட்டா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டது. நிறுவனங்களில் பணிபுரிவோர் தங்களுக்குள் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் பொருட்டு வொர்க் பிளேஸ் என்ற செயலியானது கொண்டுவரப்பட்டது. அதுமட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் ஒரே புராஜெக்ட்களில் வேலை செய்வது என்பன போன்ற செயல்பாடுகளுக்கு வொர்க்பிளேஸ் செயலி பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது.
அந்த வகையில் மெட்டா நிறுவனம் பணியிடங்களின் தேவைகளுக்காக கொண்டு வந்த வொர்க்பிளேஸ் செயலியை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக தங்களது நிறுவனம் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பிறகு வொர்க்பிளேஸ் செயலி முற்றிலும் செயல்படாது என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இருப்பினும் மெட்டா நிறுவனத்திற்குள் ஒரு தகவல் பரிமாற்ற செயலியாக மட்டும் வொர்க்பிளேஸ் பயன்படுத்தப்படும் எனக் கூறியுள்ளது.
இதுதொடர்பாக மெட்டா செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் நாம் பணியாற்ற முறைகளில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. எனவே வொர்க்பிளேஸ் செயலிக்கான தேவை என்பது குறைந்து வருகிறது, அதனை விடுத்து எங்களின் முழு கவனமும் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பங்களின் மீது இருக்கப் போகிறது” என மெட்டாவின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
மேலும், “அடுத்த இரண்டு ஆண்டுகளில் தற்போது வொர்க்பிளேஸ் செயலியை பயன்படுத்தி வரக்கூடிய வாடிக்கையாளர்களுக்கு அதிலிருந்து மற்றொரு செயலியான ஜூமின் வொர்க்விவோ செயலிக்கு மாற்றிக் கொள்வதற்கான நடைமுறைகளை மெட்டா வழங்கும்” எனவும் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Read more ; இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு அறிவிப்பு..!