ஆண்களுக்கும் மாதவிலக்கு வர வேண்டும்; அப்போதுதான் அவர்களுக்கும் அதன் நிலை புரியும்!. உச்சநீதிமன்றம் காட்டம்!
Court: கருசிதைவுக்குள்ளான பெண் நீதிபதி பதவி நீக்கம் தொடர்பான வழக்கில், ஆண்களுக்கும் மாதவிலக்கு வர வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் அதன் நிலை புரியும் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மத்தியபிரதேசத்தில், 6 பெண் சிவில் நீதிபதிகளை மாநில அரசு பணிநீக்கம் செய்தது. அவர்களது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்தது. பின்னர், இதை விசாரித்த மத்தியபிரதேச உயர்நீதிமன்றம், அவர்களில் 4 பேரை மீண்டும் பணியமர்த்த உத்தரவிட்டது. ஆனால், 2 பேரின் பணிநீக்கத்தை உறுதி செய்தது. அவர்களில் ஒரு பெண் நீதிபதி, கர்ப்பமாக இருந்தபோது கருச்சிதைவுக்கு உள்ளானவர் ஆவார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் எடுத்துக் கொண்டது. நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, கோடீஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பி.வி.நாகரத்னா, ஒரு பெண் நீதிபதி கர்ப்பம் அடைந்து கருச்சிதைவுக்கு உள்ளாகி இருக்கிறார். அதனால் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் எவ்வளவு வேதனை அடைந்திருப்பார்? அதை மத்தியபிரதேச உயர்நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. என்ன இது? ஆண்களுக்கும் மாதவிலக்கு வர வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கும் அதன் நிலை புரியும். ஆண் நீதிபதிகளுக்கும் அதே அளவுகோல்கள் நிர்ணயிக்கப்படும் என்று நம்புகிறேன் என்று கருத்து தெரிவித்துள்ளார்.