அப்பாவின் சொத்தில் திருமணமான பெண்களுக்கு பங்கு இல்லை?… உண்மை என்ன?
அப்பாவின் சொத்தில் பிள்ளைகளுக்கு பங்கு இருக்கிறதா? வாரிசுரிமை சட்டப்படி மகன்களுக்கு பங்கு இருப்பது போலவே, மகள்களுக்கும் பங்கு இருக்கிறதா என்ற சந்தேகம் இப்போது வரை பலருக்கும் இருந்து வருகிறது. அதிலும், அப்பாவுக்கு சுயமாக சம்பாதித்த சொத்து இருந்து, அதை உயிலாக எழுதி வைக்கவில்லை என்னும் பட்சத்தில், பெண்கள் தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியுமா? திருமணமான பெண்களுக்கு உரிமை இல்லையா என்பதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில், திருமணம் ஆனாலும் சரி திருமணமாகவில்லை என்றாலும் சரி, எல்லா வாரிசுகளுக்கு, பெண்களுக்கும் பங்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்து வாரிசுரிமை (திருத்தியமைக்கப்பட்டது) சட்டம் 2005 இன் படி அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தில் மகனுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதேபோல மகளுக்கும் இருக்கிறது. திருமணம் ஆனாலும், ஆகவில்லை என்றாலும் இந்த சட்டம் பொருந்தும்.
அப்பா உயில் எழுதாத பட்சத்தில், கிளாஸ் 1 சட்டபூர்வமான வாரிசுகள் என்று கருதப்படும் நேரடி வாரிசுகளுக்கு (குழந்தைகள்) பாலின வேறுபாடு இன்றி, அப்பாவின் சுய சம்பாத்தியத்தில் சம பங்கு உள்ளது. ஆனால் ஒருவேளை திருமணமான பெண்ணின் அப்பா தான் சுயமாக சம்பாதித்த சொத்தை வேறு யாருக்காவது உயில் எழுதி வைத்திருந்தால் அதில் பங்கு கேட்க முடியாது. சுய சம்பாத்தியம் இல்லாமல் பூர்வீக சொத்தாக இருந்தால் அதில் அனைவருக்கும் சமமான பங்கு உள்ளது.
பொதுவாகவே சுயமாக சம்பாத்தியம் இருக்கும் அப்பாக்கள் தன்னுடைய காலத்திற்கு பிறகு பிள்ளைகள் இடையே சொத்து பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு உயில் எழுதும் வழக்கம் இருந்து வருகிறது. எனவே உயிரோடு இருக்கும் காலத்திலேயே யாருக்கு எவ்வளவு சொத்து என்பதை தெளிவாக குறிப்பிட்டு உயில் எழுதுவது பலவிதங்களில் சௌகரியமாக இருக்கும். அதே நேரத்தில் ஒரு சிலர் உயிருடன் இருக்கும்போதே தன்னுடைய சொத்துக்களை பரிசாக வாரிசுகளுக்கு வழங்கவும் விருப்பப்படுவார்கள். குறிப்பாக திருமணமான பெண்கள் இருந்தால் பெண்ணுக்கு சென்று வீடு, நிலம், ரொக்கம், நகை உள்ளிட்டவற்றை உயிருடன் இருக்கும் போது அம்மாக்கள் பரிசாக கொடுக்க விரும்புவார்கள்.
உதாரணமாக ஒரு நபர் சுயமாக சம்பாதித்த இரண்டு வீடுகள் இருக்கின்றன. அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இருவரும் வசதியாக, நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்கள். ஆளுக்கு ஒரு வீடு என்று தனது பிள்ளைகளுக்கு அந்த நபர் கொடுக்க விரும்புகிறார். ஆனால் ஒரு வீட்டில் அவர் வசித்து வருகிறார். எனவே, உயிருடன் இருக்கும் காலம் வரை அவரே அந்த வீடுகளின் உரிமையாளராக இருந்து, அவருடைய காலத்துக்கு பிறகு அந்த வீடுகள் பிள்ளைகளுக்கு செல்லும் படி உயில் எழுதி வைக்கலாம்.