மணிப்பூர் வன்முறை!. இனி ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டால்!. காவல்துறை எச்சரிக்கை!
Manipur violence: போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரை தொடர்ந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினால், தேவையான கலவர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது.
மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. இந்த வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் உள்ள வெவ்வேறு மூன்று இடங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் சார்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது. அதோடு மணிப்பூரில் கலவரத்தைத் தடுக்க தவறியதாகக் கூறி முதல்வர் பைரன் சிங் இல்லம், ஆளுநர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்றது. இந்த போராட்டத்தின் போது மாணவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. இதனையடுத்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தினரைக் கலைத்தனர்.
இந்தநிலையில், போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினரை தொடர்ந்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினால், தேவையான கலவர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மணிப்பூர் காவல்துறை எச்சரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) கக்வாவில் இடம்பெற்ற போராட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் சனிக்கிழமை (செப்டம்பர் 14) வன்முறையாக மாறியது.
இம்பால் மேற்கு மற்றும் கிழக்கின் காவல் கண்காணிப்பாளர்களின் (SP) குண்டு துளைக்காத வாகனங்கள் போராட்டக்காரர்களால் சுடப்பட்டதில் சேதமடைந்தன என்றும் போலீஸார் தெரிவித்தனர். இந்த வார தொடக்கத்தில் இம்பாலில் நடந்த போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய கண்ணீர் புகை குண்டுகளால் மூச்சுத் திணறிய 34 வயது பெண், சனிக்கிழமை கருச்சிதைவுக்கு ஆளானதை அடுத்து போராட்டக்காரர்களிடையே பதற்றம் அதிகரித்தது.
காவல் துணைக் கண்காணிப்பாளர், ரேஞ்ச் I, என். காக்வா பகுதியில் கும்பலைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் போது, சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் துப்பாக்கிகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளால் காவல்துறையினரைத் தாக்கியதாக ஹீரோஜீத் ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். இம்பால் கிழக்கு எஸ்பியின் குண்டு துளைக்காத வாகனம் மீதும் மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக சுட்டதாக அவர் கூறினார். "முந்தைய போராட்டங்களைப் போலல்லாமல், பெட்ரோல் குண்டுகள், ஸ்லிங்ஷாட்கள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் போராட்டக்காரர்களுக்குப் பதிலடி கொடுக்க வேண்டிய நிலை தற்போது காவல்துறைக்கு உள்ளது. இது துரதிர்ஷ்டவசமானது" என்று ஹீரோஜீத் கூறினார்.
முன்னதாக, செப்டம்பர் 6 மற்றும் 7 க்கு இடையில் இரவு, இம்பால் கிழக்கு கமாண்டோ பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் மற்றொரு பணியாளர், இம்பாலின் கிழக்கில் உள்ள கபேசோய் என்ற இடத்தில் எதிர்ப்பாளர்கள் சுட்டத்தில் காயமடைந்தனர். மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்த மணிப்பூர் காவல்துறை குறைந்தபட்ச சக்தியைப் பயன்படுத்தியது என்று ஹீரோஜீத் வலியுறுத்தினார். பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காமல் ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஹீரோஜீத், "காவல்துறையினர் எதிரிகள் அல்ல, அவர்களும் மண்ணின் மைந்தர்கள், போராட்டக்காரர்களுடன் ஆயுதமேந்திய மர்மநபர்கள் ஊடுருவி, வேண்டுமென்றே காவல்துறையைக் குறிவைப்பது நிறுத்தப்பட வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் போது அதிக நடவடிக்கை எடுக்க போலீஸாரை வற்புறுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
Readmore: 2029 முதல் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்!. ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயாரான மோடி அரசு!