அதிர்ச்சி!. 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஓலா!. என்ன காரணம்?
Ola: நிதிநிலையை மேம்படுத்திக்கொள்ளும் வகையில், 500 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எடுத்துவருகிறது.
இந்தியர்கள் மத்தியில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலைக் கருத்தில் கொண்டு பன்னாட்டு நிறுவனங்கள் பல தங்களின் வருகையை இந்தியாவில் பதிவு செய்த வண்ணம் இருக்கின்றன. இந்தநிலையில், பாவிஷ் அகர்வால் தலைமையிலான ஓலா நிர்வாகம், 500-க்கும் அதிகமான பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் லாபத்தை அதிகரிக்கவும், செலவுகளைக் குறைக்கவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த பணிநீக்க நடவடிக்கை முதல்முறை அல்ல. முன்னதாக, 2022 செப்டம்பரில், ஐபிஓ-வுக்கு முன்னதாக, இந்நிறுவனம் இரண்டு முறை பணியாளர் குறைப்பு மற்றும் புதிய நியமனங்களை மேற்கொண்டது. அதே ஆண்டின் ஜூலை மாதத்தில், பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை, கிளவுட் கிச்சன் மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி ஆகிய மூன்று வணிக பிரிவுகளை மூடிவிட்டு, சுமார் 1,000 பணியாளர்களை நீக்கியது.
2025-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 38.5% அதிகரித்து ரூ. 1,240 கோடியை எட்டியது, இந்த அதிரடி வளர்ச்சி விற்பனை அதிகரிப்பால் ஏற்பட்டது. 2024-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 56,813 வாகனங்கள் விற்பனையான நிலையில், 2025-ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் விற்பனை 98,619 வாகனங்களாக அதிகரித்தது.
இருப்பினும், ஓலா எலக்ட்ரிக் சில சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் குறைபாடுகள் உள்ளது குறித்து பல நுகர்வோர் புகார்கள் வந்துள்ளதால் விசாரணை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Readmore: ’செல்போன் பயன்படுத்துவதால் தண்டுவடம் பாதிக்குமாம்’..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!