Delhi: இன்று விவசாயிகளின் மகா பஞ்சாயத்து!… அடுத்த கட்ட போராட்டத்தை கையில் எடுக்க திட்டம்!
Delhi: டெல்லி ராம்லீலா மைதானத்தில் இன்று விவசாயிகளின் மகா பஞ்சாயத்து நடைபெறும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
டெல்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்துவதற்காக திரண்ட விவசாயிகள் பஞ்சாப், அரியானா எல்லையில் நிறுத்தப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் முன்னேற முயன்று வருவதால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 21 வயது இளைஞரான சுப்கரன் சிங் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் இரண்டு நாட்கள் பேரணிக்கு செல்லும் திட்டத்தை விவசாயிகள் நிறுத்தி வைத்தனர். இதையடுத்து, டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து நடைபெறும் என கடந்த பிப்.22ம் தேதி பாரதிய கிஷான் சிங் தலைவர் பல்பிர் சிங் ரஜேவால் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து போராட்டம், பேரணி, கருப்பு தினம் மகா பஞ்சாயத்து என விவசாயிகள் எம்.எஸ்.பி.க்காக பல்வேறு கட்ட போராட்டங்களை அடுத்தடுத்து கையில் எடுக்க உள்ளனர். இதனால், தலைநகர் டெல்லியில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த மகா பஞ்சாயத்தை நடத்த விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லி ராம்லீலா மைதான இடங்களில் 5,000 பேருக்கு மேல் கூடக்கூடாது. டிராக்டர்கள், தள்ளுவண்டிகள், அணிவகுப்பு ஏதும் நடத்தக்கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த மகா பஞ்சாயத்து நடைபெறுவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், மத்திய டெல்லிக்கு செல்லும் சாலைகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Readmore: இன்றுமாலை 5 மணிக்கு பிரதமர் மோடி உரை!… முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்!… அரசு வட்டாரங்கள் தகவல்!