”ராசாவே உன்ன காணாத நெஞ்சு”..!! காற்றில் கரைந்தார் பின்னணி பாடகர் ஜெயச்சந்திரன்..!! உடல் தகனம்..!!
மறைந்த பிரபல பின்னணி பாடகர் ஜெயச்சந்திரனின் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 16,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய பிரபல பின்னணி பாடகர் பி.ஜெயச்சந்திரன் கடந்த வியாழனன்று (ஜனவரி 9) காலமானார். அவருக்கு வயது 80. கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், அவரது உயிர் பிரிந்தது.
கடந்த 1944, மார்ச் 3ஆம் தேதி எர்ணாகுளத்தில் அவர் பிறந்தார். அவரது தந்தையை பின்பற்றி இசை பயின்று, அதில் தேர்ச்சி பெற்றார். விலங்கியலில் இளங்கலை பட்டம் பெற்ற அவர், சென்னையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடியதன் மூலம் திரைப்படத்துக்கு பாடும் வாய்ப்பை பெற்றார். தமிழில் கடந்த 1973 முதல் திரைப்படங்களுக்கு பாடல் பாடி உள்ளார். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா, ஏ.ஆர்.ரஹ்மான், வித்யாசாகர், பரணி, ஸ்ரீகாந்த் தேவா, ஜி.வி.பிரகாஷ்குமார் உள்ளிட்ட இசை அமைப்பாளர்களுடன் தமிழில் பணியாற்றி உள்ளார்.
ஸ்ரீமன் நாராயண குரு’ மலையாளப் படத்தில் ‘சிவசங்கர சர்வ சரண்ய விபோ’ பாடலுக்காக 1975-ம் ஆண்டு சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றார் ஜெயச்சந்திரன். இந்நிலையில், அவரது உடல் சொந்த ஊரான செண்டமங்களத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திரை பிரபலங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று இறுதிச் சடங்குகள் முடிந்து, பிற்பகல் 1 மணிக்கு பாலியம் தரவாட்டில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.