அடி தூள்..! புதிதாக 1.48 லட்சம் பேருக்கு ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை இன்று வழங்கப்படும்...!
தமிழகம் முழுவதும் இன்று 1 லட்சத்து 48 ஆயிரம் நபர்களுக்கு புதிதாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது.
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அன்றாடச் செலவிற்கும், சேமிப்பிற்கும் பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகையின் 10-வது தவணை ரூ.1000, இன்று வரவு வைக்கப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அதுமட்டுமன்றி இந்த முறை கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளனர். அதன் படி முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு, முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு, புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு, புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படலாம்.
மகளிர் உரிமைத் தொகை தற்போது ஒரு கோடியே 15 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும், மகளிர் உரிமைத் தொகை பெற, ஏற்கனவே விண்ணப்பித்த விண்ணப்பங்களில் பல்வேறு காரணங்களால் விடுபட்டுள்ள நபர்களுக்கு இன்று ஒரு லட்சத்து 48 ஆயிரம் நபர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட உள்ளது என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த வாரம் தெரிவித்தார். இதனிடையே புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் இன்று செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.