இன்று காலை 7 மணிக்கு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு...! சீறிப்பாயும் காளைகள்...! வீரர்களுக்கு கட்டுப்பாடு...!
இன்று காலை 7 மணிக்கு மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மதுரை மாவட்டம், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் கிராமங்களில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டிக்கு 2,026 காளைகள், 1,735 மாடுபிடி வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். இவர்களில் போட்டிகளில் பங்கேற்க உள்ள சிறந்த காளைகள், மாடுபிடி வீரர்களுக்கு நேற்று ‘டோக்கன்கள்’ வழங்கப்பட்டது.
விழா மேடை, பார்வையாளர் கேலரி, தடுப்பு வேலிகள், சோதனை மையம், சிசிடிவி கேமரா, வாடிவாசல் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் போட்டியை தொடங்கி வைக்கின்றனர். இரவு 7 மணி வரை ஒவ்வொரு சுற்றிலும் 50 காளைகள் களத்தில் அவிழ்த்து விடப்படும்.
காளைகளை அழைத்து வருவோர், மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட அனுமதி டோக்கன், காளை உரிமையாளர்களின் ஆதார் அட்டையை கண்டிப்பாக கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்பர். மது அருந்திவிட்டு வரும் வீரர்கள் உடனடியாக போட்டியில் இருந்து விலக்கப்படுவர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் 2,500 போலீஸார் அவனியாபுரத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.