கிராமங்களில் குறைந்த செலவில் 5G தொழில்நுட்பம்...! மத்திய அரசு ஒப்பந்தம்
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் முதன்மையான தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமாடிக்ஸ் மேம்பாட்டு மையம், 5ஜி கிராமப்புற இணைப்புக்கான குறைந்த செலவிலான பாலிமர் அடிப்படையிலான மில்லிமீட்டர் அலை டிரான்ஸ்ஸீவரை உருவாக்குவதற்காக இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்க்கியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
மத்திய அரசின் தொலை தொடர்புத் துறையின் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. நாட்டின் புத்தொழில் நிறுவனங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்கு நிதியளிக்க வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், தொலைத்தொடர்பு தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வடிவமைத்தல், உருவாக்குதல் மற்றும் வணிகமயமாக்குவதற்கான ஒரு முக்கியமான உதவியாகும். இது குறைந்த கட்டணத்தில் அகண்ட அலைவரிசை மற்றும் மொபைல் சேவைகளை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.
இந்த திட்டம் மில்லிமீட்டர் அலை பேக்ஹால் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது, இதில் ஒரு சிறிய எண்ணிக்கையிலான சிறிய செல் - அடிப்படை நிலையங்கள் மட்டுமே ஃபைபர் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நாட்டில் தங்களது உற்பத்திப் பிரிவுகளை அமைக்க இது ஊக்குவிப்பதோடு, உலோகங்களுடன் பாலிமர் அடிப்படையிலான கட்டமைப்பைப் பயன்படுத்துவதன் காரணமாக நமது பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இது குறைக்கடத்தி ஃபேப்ரிகேஷன் தொழில்களை நாம் அதிகமாக சார்ந்திருப்பதையும் குறைக்கும்.