மியான்மார் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை.! லாட்டரி கிங் மாட்டின் கடந்து வந்த பாதை.!
தொழில் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை வழங்கியது தொடர்பான விவரங்களை வாக்காளர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை வெளியிடுமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரை எஸ்பிஐ வங்கியின் மூலம் செலுத்தப்பட்ட தேர்தல் பத்திர விபரங்களை அந்த வங்கி உச்சநீதிமன்றத்திடம் சமர்ப்பித்தது
இந்த தகவல்கள் தற்போது தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த ஐந்து வருடங்களில் வங்கிகளின் மூலம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக மாற்றியுள்ளதும் வெளியாகி இருக்கிறது. இதில் ஃப்யூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் நிறுவனம் 1368 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனத்தை கோவையைச் சேர்ந்த சாண்டியாகோ மார்ட்டின் என்பவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் லாட்டரி உலகின் மன்னன் என அழைக்கப்படும் இவருக்கு லாட்டரி மார்ட்டின் என்ற புனைபெயரும் இருக்கிறது. கோவை மாவட்டத்தை சேர்ந்த இவர் மியான்மார் நாட்டில் ஒரு சாதாரண தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் 80களின் இறுதியில் இந்தியாவிற்கு வந்த இவர் தனது சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் லாட்டரி நிறுவனம் ஒன்றை தொடங்கினார். பின்னர் இவரது லாட்டரி தொழில் கேரளா கர்நாடகா ஆந்திரா மகாராஷ்டிரா மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் என்ன விரிவடைந்தது.
இதன் மூலம் இவருக்கு ஏராளமான லாபமும் கிடைத்தது. தற்போது லாட்டரி தடை செய்யப்படாத கேரளா மேற்கு வங்காளம் நாகாலாந்து அருணாச்சல பிரதேஷ் உள்ளிட்ட 13 மாநிலங்களில் இவரது ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் 1,000 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. லாட்டரி சீட்டு தவிர ஹோமியோபதி மருத்துவமனை தங்கும் விடுதிகள் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலிலும் லாட்டரி மார்ட்டின் ஈடுபட்டு வருகிறார்.
லாட்டரி மார்ட்டின் மீது இதற்கு முன்பு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருக்கிறது. சிக்கிம் அரசுக்கு எதிராக 4,500 கோடி ரூபாய் மோசடி செய்ததாக இவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சட்டவிரோதமான லாட்டரி நடவடிக்கைக்கு எதிராக தமிழக மற்றும் கேரளா அரசுகள் லாட்டரி மார்ட்டினின் நிறுவனங்களில் அதிரடி சோதனைகள் நடத்தியது. வருமான வரி மோசடி தொடர்பான வழக்கில் வருமான வரித்துறை அதிகாரிகள் தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள மார்ட்டினின் நிறுவனங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இவை தவிர சிக்கிம் அரசுக்கு எதிராக 900 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக கூறி அமலாக்க துறையினர் இவரிடம் இருந்து 457 கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.