இந்தியாவை பதற்றத்திற்குள் தள்ளுவோம்!… நியூசிலாந்து முன்னாள் வீரர் டெய்லர் பேச்சு!
கடந்த 2019ம் ஆண்டை போலவே நடப்பாண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியிலும் இந்தியாவை வீழ்த்துவோம் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் டெய்லர் பேசியுள்ளார்.
கடந்த 2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. 2019 உலகக்கோப்பையை வெல்லும் ஒரு அணியாக இந்தியா பார்க்கப்பட்டாலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்றது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டை போன்றே 2023 உலகக்கோப்பையிலும் நியூசிலாந்து இந்திய அணியை வீழ்த்தும் என முன்னாள் நியூசிலாந்து அதிரடி வீரர் ராஸ் டெய்லர் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அரையிறுதி குறித்து பேசியிருக்கும் ராஸ் டெய்லர், “ இந்திய அணியில் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் நம்பர் 1 வீரரான கில் போன்ற வீரர்கள் இருக்கின்றனர். ஆனால் இழப்பதற்கு எதுவுமில்லை என்ற சூழ்நிலையில் நியூசிலாந்து அணி எந்த அணியையும் வீழ்த்தக்கூடிய ஒரு அபாயகரமான அணியாக மாறும். நியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே 1-2 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய மிடில் ஆர்டர் மீது அழுத்தத்தை போடும். ஒருவேளை நியூசிலாந்து தொடக்கத்திலேயே விக்கெட்டுகளையும், ரன்களையும் எடுத்துவந்தால் இது ஒரு சிறந்த போட்டியாக மாறும்” என்று ராஸ் டெய்லர் ஐசிசியிடம் கூறியுள்ளார்.
மேலும், “ சொந்த மண்ணில் இந்திய அணி விருப்பமான அணியாக இருந்தாலும், இந்தியாவை பதற்றத்திற்குள் தள்ளும் ஒரு அணி என்றால் அது நியூசிலாந்து அணி. டாஸ் போட்டியில் முக்கியமான ஒன்றாக இருக்கும். முதல் 10 ஒவரில் இந்திய அணியை பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் கட்டுக்குள் வைத்துவிட்டால் நிச்சயம் இது நியூசிலாந்து நாளாக மாறும்” என்று மேலும் கூறியுள்ளார்.