தீவினைகள் நீங்கி.. திருமண தடையை விலக்கும் அகத்தியான்பள்ளி அகத்தீஸ்வரர் கோயில்..!! எங்க இருக்கு தெரியுமா..?
தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் ஒன்றான அகத்தியான்பள்ளி என்ற ஊரில் அமைந்திருக்கும், அகத்தீஸ்வரர் கோவிலைப் பற்றி இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
கோயில் அமைப்பு ; மூன்று நிலை ராஜகோபுரத்துடன் அமைந்த இந்த ஆலயத்தில், ராஜராஜன், மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தில் மூலவரான அகத்தீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். இறைவனின் சன்னிதி கிழக்கு நோக்கியும், அம்பாளின் சன்னிதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது. எமதர்மராஜன் வழிபாடு செய்த இந்த ஆலயத்தில், நவக்கிரகங்கள் அதன் அதன் திசையைத் தவிர்த்து, ஒரே திசையைப் பார்த்தபடி அமைந்திருப்பது வித்தியாசமான அமைப்பாக பார்க்கப்படுகிறது.
கோயில் வரலாறு ; சிவன்-பார்வதி திருமணம் கயிலை மலையில் நடைபெற இருந்தது. அதைக்காண தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவரும் கயிலையில் குவிந்ததால் அந்தப் பகுதி தாழ்ந்து, தென்பகுதி உயர்ந்தது. உலகை சமநிலைபடுத்த அகத்தியரை, சிவபெருமான் தென்பகுதிக்கு அனுப்பினார். அப்போது இந்தப் பகுதிக்கு வந்த அகத்தியருக்கு, சிவபெருமான் தன்னுடைய திருமணக் காட்சியை காட்டி அருளினார். அகத்தியர் வழிபட்டதால் இந்த ஊர் ‘அகத்தியான் பள்ளி’ என்று பெயர் பெற்றது என்பது தலவரலாறு.
தீராத நோய் தீரும் : புராண கதைகளின்படி, குலசேகர பாண்டியன் இந்தப் பகுதியை ஆட்சி செய்தபோது, அவருக்கு தீராத நோய் ஏற்பட்டது. இக்கோயில் உற்சவத்தை நடத்தியதன் பலனாக, அவரது நோய் நீங்கியது.
கோயில் எங்கு அமைந்துள்ளது? நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை செல்லும் சாலையில், சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது அகத்தியான் பள்ளி திருக்கோவில். தேவாரப் பாடல் பெற்ற சோழநாட்டு காவிரித் தென்கரை தலங்களில், 126-வது தலம் இதுவாகும்.
Read more ; 48 குண்டுகள் முழங்க.. அரசு மரியாதையுடன் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் தகனம்..!!