சபரிமலையில் இயற்கை மரணம் அடையும் பக்தர்களின் குடும்பத்திற்கு நிவாரணம்..!! - திருவிதாங்கூர் தேவஸ்தம்போர்டு
சபரிமலை பயணத்தின் போது இயற்கை மரணம் அடைந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு அடுத்த ஆண்டு முதல் உதவித்தொகை வழங்கப்படும் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தம்போடு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறியுள்ளார்.
சபரிமலை கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். குறிப்பாக கார்த்திகை மாதத்தில் நடைபெறும் இந்த பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். பல்வேறு பகுதிகளிலிருந்தும் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து தரிசனம் செய்வார்கள். தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இதற்காக தேவசம் போர்டு தரப்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் இறப்பு எண்ணிக்கை ஆண்டு தோறும் குறைந்த பாடில்லை.. 2023 - 24 சீசனில் 48 பேர் இறந்தனர். இந்த சீசனில் தற்போது வரை 19 பேர் இறந்துள்ளனர். இந்த நிலையில், இயற்கை மரணம் அடைந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு அடுத்த ஆண்டு முதல் உதவித்தொகை வழங்கப்படும் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தம்போடு தலைவர் பி.எஸ்.பிரசாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சபரிமலை வரும் வாகனங்களில் விபத்து ஏற்பட்டு பக்தர்கள் மரணமடையும் நிலை ஏற்பட்டால் அவர்களுக்கு இன்சூரன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இயற்கையாக மரணம் அடைபவர்களுக்கு இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்க வாய்ப்பில்லை. எனினும் அந்த பக்தர்களுக்கு உதவுவதற்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது.
அடுத்த ஆண்டு முன்பதிவு செய்யும்போது பத்து ரூபாய் பக்தர்களிடமிருந்து வசூலிக்கப்படும். அதை வைத்து இயற்கையாக மரணமடையும் பக்தர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்படும். ஒரு சீசனில் 60 லட்சம் பேர் முன்பதிவு செய்யும்போது பத்து ரூபாய் வீதம் அவர்கள் செலுத்தினால் ஆறு கோடி ரூபாய் தேவசம்போர்டுக்கு கிடைக்கும். இது சபரிமலைக்கு பக்தர்கள் செய்யும் பேருதவியாக அமையும்.