இதுவரை விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தாத முன்னணி நடிகர்கள்..!! என்ன காரணம்..?
கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சரத்குமார், இளையராஜா, கவுண்டமணி, லோகேஷ் கனகராஜ், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆனால், அஜித், சூர்யா, விஷால், விக்ரம், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் அஞ்சலி செலுத்தாது விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் தன்னலமற்ற ஹீரோவாக ஜொலித்தவர் கேப்டன் விஜயகாந்த். சினிமா மட்டுமின்றி, அரசியல், பொது வாழ்விலும் நிஜமான ஹீரோவாக மாஸ் காட்டினார். தன்னுடன் நடித்தவர்கள், நடிக்காதவர்கள் என திரையுலகைச் சேர்ந்த பலருக்கும் ஏராளமான உதவிகளை செய்துள்ளார். நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தியுள்ளார். அதேபோல் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோதும் விஜயகாந்த் செய்த சாதனைகள் அதிகம்.
கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார் விஜயகாந்த். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், நேற்று காலை உயிரிழந்தார். இதனையடுத்து திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உட்பட லட்சணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். நேற்றிரவு விஜய், இளையராஜா, இயக்குநர்கள் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதேபோல் இன்று ரஜினி, கமல்ஹாசன் ஆகியோரும் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆனால், இன்னும் பல முன்னணி ஹீரோக்கள் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.
விடாமுயற்சி படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் சென்றிருந்த அஜித், தற்போது துபாயில் ஓய்வெடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அவருடன் அஜர்பைஜான் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அர்ஜுன், நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ஆனால், அஜித் நேரில் அஞ்சலி செலுத்தாததோடு இரங்கலும் தெரிவிக்கவில்லை. இதனை அஜித் ரசிகர்களே விமர்சித்து வருகின்றனர். சீயான் விக்ரமும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தவில்லை.
அதேபோல் சூர்யாவுக்கு அவரது சினிமா கேரியரில் அறிமுகம் ஏற்படுத்திக் கொடுக்க பெரியண்ணா படத்தில் நடித்திருந்தார் விஜயகாந்த். ஆனால், விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார் சூர்யா. படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதால் நேரில் அஞ்சலி செலுத்த வர முடியவில்லை என சொல்லப்படுகிறது. சூர்யாவின் தம்பி கார்த்தி, அவரது அப்பா சிவகுமார் ஆகியோரும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தவில்லை.
தனுஷின் அக்காவுக்கு மெடிக்கல் சீட் வாங்கிக் கொடுத்தவர் விஜயகாந்த். ஆனால், தனுஷும் படப்பிடிப்புக்காக வெளியூரில் இருப்பதால் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை. ஆனால், அவர் ட்விட்டரில் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்திருந்தார். அதேபோல் சிம்புவும் வெளிநாட்டில் இருப்பதால் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தவில்லை.
சிவகார்த்திகேயனும் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தாமல் ட்விட்டரில் மட்டுமே இரங்கல் தெரிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன்னர் அயலான் இசை வெளியீட்டு விழாவுக்காக சென்னையில் இருந்த சிவகார்த்திகேயன், இப்போது படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றுவிட்டதாகத் தெரிகிறது. அதனால் அவரும் விஜயகாந்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தவில்லை.
பொதுவாகவே மனிதர்கள் தங்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி விசுவாசத்தோடு இருப்பார்கள். ஆனால், ஒரு சில மனிதர்கள் அவர்களின் மூலம் நன்கு வளர்ச்சி அடைந்த பிறகு எவர் பற்றியும் கவலை கொள்ளாமல் நன்றி உணர்ச்சி இல்லாமல் நடந்து கொள்வார்கள். அந்த வகையில் நடிகர் வடிவேலு தன்னை வளர்த்தி விட்ட விஜயகாந்த் இறப்புக்கு கூட நேரில் சென்று அஞ்சலி செலுத்தாமல் மிதப்பில் இருப்பது தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.