அதிருப்தி...! வேலூர் மாவட்டத்தில் பாஜகவில் இருந்து கூண்டோடு விலகிய தலைவர்கள்...! என்ன காரணம் ...?
வேலூர் மாவட்ட பாஜகவின் புதிய தலைவர் தசரதன் நியமனத்தை எதிர்த்து 5 நிர்வாகிகள் விலகல். கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட தசரதனை மாவட்ட தலைவராக நியமித்ததை எதிர்த்து, மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாபு, ஜெகநாதன், மகேஷ்குமார் மற்றும் மாவட்ட பொருளாளர் தீபக் ஆகியோர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
இது குறித்து மாநில தலைமைக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில்; வேலூர் மாவட்ட மையக்குழு தலைவர், பொது செயலாளர்கள் மற்றும் பொருளாளர்) பணிவுடன் தெரிவித்து கொள்வது, கடந்த மூன்றாண்டு காலமாக எங்களுக்கு இந்த பொறுப்பினை வழங்கி கவுரவ படுத்தியதற்கு நன்றி கடந்த சில நாட்களாக நம்முடைய கட்சியின் தேர்தல் பணிகள் நடைபெற்று முடிந்தது, இப்பணியை நாங்கள் சிறப்பாக செய்து முடித்து கொடுத்துளோம்.
புதிய மாவட்ட தலைவர் அறிவுப்பு வரும் நிலையில், தற்பொழுது தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறியப்படும் நபர், முன்னாள் நிர்வாகிகள் ஒருங்கிகிணைப்பு குழுவிற்கு தலைமை வகித்து கட்சிக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வந்தவர். கட்சியின் வளர்ச்சிக்கும், கட்சிக்காக உழைத்த தொண்டர்களின் எண்ணத்திற்கும் எதிரான இந்த நியமனத்தில் எங்களுக்கு உடன்பாடு இல்லாததால், மிகுந்த வருத்தத்துடன் எங்கள் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.