திமுக கூட்டணிக்கு தாவும் கிருஷ்ணசாமி..? ஐயோ இவரா..? உடன்பிறப்புகள் எதிர்ப்பு..!!
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். தான் ஆர்எஸ்எஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளதாக கூறி வந்தார். தென்காசி மக்களவைத் தொகுதிக்கு குறி வைத்திருந்த நிலையில், அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரான 'ஸ்டார்ட் அப் பிரிவு' மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ணசாமி, தமிழகம் வந்த பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை சந்திக்கச் செல்லவில்லை. மேலும், தேவேந்திர குல வேளாளர் எனப் பெயர் மாற்றம் செய்துவிட்டு பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றும் கோரிக்கையையும் நிறைவேற்றாமல் மத்திய அரசு தவறிழைத்துவிட்டதாக கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார். இந்நிலையில், திமுக கூட்டணியில் புதிய தமிழகம் இணைந்து தென்காசி தொகுதியில் போட்டியிட வேண்டும் என கிருஷ்ணசாமியிடம் அவரது கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
கட்சி நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று கிருஷ்ணசாமி திமுக கூட்டணிக்கு தாவுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேநேரத்தில் கிருஷ்ணசாமியை திமுக கூட்டணியில் சேர்க்க திமுக நிர்வாகிகள் பலர் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் சொல்லப்படுகிறது.