கொடநாடு வழக்கு..!! எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியத்தை பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு..!!
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவரான கனகராஜின் அண்ணன் தனபால், தேவையில்லாமல் தனது பெயரை பயன்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை சம்பந்தப்படுத்தி பேச தனபாலுக்கு இடைக்கால தடை விதித்தது. பின்னர் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியின் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்காக உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் கோர்ட்டுக்கு இந்த வழக்கானது அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், மாஸ்டர் கோர்ட்டில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்க வேண்டும். தன் வீட்டிற்கு வந்து சாட்சியத்தை பதிவு செய்ய வக்கீல் ஆணையர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி என். சதீஷ் குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியத்தை பதிவு செய்ய வக்கீல் ஆணையராக வக்கீல் எஸ். கார்த்திகை பாலனை நியமித்து உத்தரவிட்டார்.
மேலும் சாட்சியத்தை பதிவு செய்து அறிக்கையாக ஜனவரி 21ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஏற்கனவே பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கிலும் இதே வக்கில் ஆணையராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.