KKR vs PBKS | மிட்செல் ஸ்டார்க் காயமடைந்தாரா? கேகேஆர் ஆல்ரவுண்டர் கொடுத்த முக்கிய அப்டேட்.!!
KKR vs PBKS: 2024 ஆம் வருடத்திற்கான ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 41 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 14 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்திலும் தலா 10 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணிகள் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.
இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டிக்கு நடைபெற்ற மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆஸ்திரேலியா அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை 24.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை மிட்செல் ஸ்டார்க் படைத்தார். எனினும் இந்த வருட ஐபிஎல் தொடர் அவருக்கு சிறப்பானதாக அமையவில்லை.
ஒன்பது வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் தொடருக்கு மீண்டும் திரும்பிய மிட்செல் ஸ்டார்க் இதுவரை ஏழு போட்டிகளில் விளையாடி 287 ரன்கள் விட்டுக் கொடுத்திருக்கிறார். ஒரு ஓவருக்கு சராசரியாக 11.48 ரன்கள் கொடுத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இது மோசமான பந்துவீச்சாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஆர்சிபி அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது மிட்செல் ஸ்டார்க்கிற்க்கு கைவிரலில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இதனால் இன்று நடைபெற இருக்கும் பஞ்சாப் கிங்ஸ்(KKR vs PBKS) அணிக்கு எதிரான போட்டியில் மிட்செல் ஸ்டார்க் பங்கேற்பாரா என்ற கேள்வி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரசிகர்களிடம் எழுந்தது. இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க் இந்தப் போட்டியில் பங்கேற்பது குறித்து கொல்கத்தா அணியின் ஆல் ரவுண்டர் ராமன்தீப் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர் " மிட்செல் ஸ்டார்க் இந்தப் போட்டியில் விளையாடுவார். அவருடைய பணி சுமையை குறைப்பதற்காக பயிற்சிகளின் போது பந்து வீசவில்லை. அவர் கிரிக்கெட்டின் லெஜன்ட். ஒரு சில போட்டிகளை வைத்து அவருடைய திறமையை மதிப்பிட முடியாது" என தெரிவித்தார். ஸ்டார்க் தனது சிறந்த ஃபார்மில் இல்லாவிட்டாலும் பந்துவீச்சு குறித்து அவரிடம் எந்த விவாதமும் மேற்கொள்ளப்படவில்லை. ஒரு சில போட்டிகளை வைத்து யாரையும் மதிப்பிட முடியாது எனக் கூறினார்.
இந்த வருட ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணி சிறப்பாக செயல்பட்டு வந்தாலும் ஒவ்வொரு போட்டிகளையும் கவனமுடன் எதிர் கொள்வதாக தெரிவித்திருக்கிறார் ராமன்தீப். மேலும் இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் கௌதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மென்டராக நியமிக்கப்பட்டது அந்த அணியின் எழுச்சிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.