10-ம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதி மறைந்த தேதி தவறு...! மாற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு...!
பள்ளி பாட புத்தகங்களில் தவறாக உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த தேதி தவறாக உள்ளதை திருத்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக, கடந்த ஆண்டு 9-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன. இந்த ஆண்டு 10-ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உரைநடை பகுதியில் 'பன்முக கலைஞர்' என்ற தலைப்பில், கருணாநிதியின் திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் பாடமாக சேர்க்கப்பட்டது. இந்த பாடப் பகுதியின் இறுதியில் தமிழ் வெல்லும் என்று அவரின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது.
கருணாநிதி 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ம் தேதி தனது 94-ம் வயதில் தமிழர் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கும் காவியமானார்’எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி, 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி வயது முதிர்வால் உயிரிழந்தார். எனவே அவரின் இறப்பு தேதி மாற்றி குறிப்பிடப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை எழுதியுள்ள கடிதத்தில்; 10-ம் வகுப்பு தமிழ் பாடப்பகுதியில் இயல் 6இல் பன்முக கலைஞர் என்ற தலைப்பில், பக்கம் 132-ல் கடைசிப் பத்தி வரி 11-ல் ஜூலை மாதம் 7ஆம் நாள் என்பதற்கு பதிலாக அதனை திருத்தம் செய்து ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி என்று படிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.