அமரன் படத்தை புகழ்ந்து தள்ளிய அண்ணாமலை...நன்றி தெரிவித்த கமல்ஹாசன்..!!
அமரன் திரைப்படத்தை பாராட்டிய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக அக். 31ஆம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை நடிகர் கமல்ஹாசனின் ஆர்கேஎஃப்ஐ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
குறிப்பாக, படத்தில் இடம்பெற்ற சண்டை மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. இந்த நிலையில் 'அமரன்' திரைப்படத்தை லண்டனில் பார்த்துவிட்டு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “’அமரன்’ படம் பார்க்க நேர்ந்தது. இது பல அம்சங்களில் மிக முக்கியமான திரைப்படம். சீருடையில் இருக்கும் நமது ஆட்களின் வீரம், துணிச்சல் மற்றும் நேர்மை காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. நமது நாட்டின் மிகச்சிறந்த வீரர்கள், எஞ்சியுள்ள நம்மை பாதுகாக்கும் பொருட்டு தங்களை தாங்களே தியாகம் செய்யும்போது ஒரு குடும்பம் கொடுக்கும் விலை என்ன என்பது தெளிவாக காட்டப்பட்டுள்ளது.
ஏன் நம் அனைவரையும் விட ஒரு சிலர் எப்போதும் மிகவும் சிறப்பு வாய்ந்தவர்களாக உள்ளனர். ஏனெனில், அவர்கள் தங்களது சீருடையை அணிந்து கொண்டு விருப்பத்துடன் ஆபத்தை நோக்கி செல்கின்றனர். உணர்வுபூர்வமான துயரத்தையும் வலியையும் ஒரு ராணுவ வீரனின் குடும்பம் பெருமையுடன் சுமக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை பல யுகங்களுக்கு ஊக்கம் தரும் கதையாக இருக்கும். 2014-ல் நம் நாட்டுக்காக அவர் செய்த உச்சபட்ச தியாகம், நமக்குள் நாம் எதையோ ஒன்றை இழந்துவிட்ட உணர்வை நமக்கு தந்தது. நான் என்னுடைய காக்கி சீருடையில் இருந்த அந்த காலகட்டத்தில் உணர்ச்சிகர தருணங்கள் எனக்கு துல்லியமாக நினைவில் உள்ளன.
ராஜ்குமார் பெரியசாமியின் அருமையான இயக்கம் நடிப்பு, சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் அற்புதமான நடிப்பு, வேறு யாராலும் செய்திருக்க முடியாத சாய் பல்லவியின் கதாபாத்திரம், விறுவிறுப்பான இசை மற்றும் கேமரா. இந்த படத்தை தயாரித்த கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றிகள். இப்படம் சீருடையில் சேவை செய்யும் அனைவருக்கும், உயிர் நீத்தவர்களுக்கும் ஒரு சமர்ப்பணம் என்று கருதுகிறேன். நமது ராணுவ படைகள் நீடுழி வாழ்க.. இதை நாங்கள் பெருமையுடன் சொல்கிறோம் - நீங்கள்தான் சிறந்தவர்கள். இந்த அற்புதமான படத்தை கொடுத்த அமரன் படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமரன் திரைப்படம் அவருக்கு ஏற்படுத்திய உணர்வலைகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். அவருக்கு என் நன்றி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக அமரன் திரைப்படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.