அல்லு அர்ஜூனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..
புஷ்பா வெளியாகி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த படம் தான் புஷ்பா 2 தி ரூல். அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். ரூ.500 கோடி வரையில் பட்ஜெட் போட்டு எடுக்கப்பட்ட இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே தியேட்டர் ரைட்ஸ் மற்றும் தியேட்டர் அல்லாத உரிமை அதாவது ஓடிடி என்று ரூ.1085 கோடி வரையில் வசூல் குவித்து சாதனையை படைத்துள்ளது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பான் இந்தியா படமாக 12000க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியானது.
இந்த படத்தின் பிரீமியர் ஷோ, ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் படம் வெளியாவதற்கு முன்தினம் திரையிடப்பட்டது. அப்போது அல்லு அர்ஜுன் அந்த திரையரங்கிற்கு வர உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். கட்டுப்படுத்த முடியாத கூட்டம் முண்டியடித்த போது ஏற்பட்ட நெரிசலில், ரேவதி என்ற ரசிகையும் அவரது மகனும் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து அவர்களை உடனடியாக துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பூகம்பமாக வெடித்த நிலையில் அந்த ரசிகை ரேவதியின் கணவர் கொடுத்த புகாரின் பேரில், அல்லு அர்ஜூன், தியேட்டர் மேனேஜ்மெண்ட் மற்றும் பாதுகாப்பு டீம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயிரிந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் இழப்பீட்டு தொகையை அல்லு அர்ஜுன் வழங்கியுள்ளார். ரேவதி உயிரிழந்த விவகாரத்தில் தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி தெலுங்கானா ஐகோர்ட்டில் அல்லு அர்ஜுன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூனை தெலுங்கானா போலீசார் கைது செய்தனர்.
பின்னர், கைதான அல்லு அர்ஜுன் நம்பள்ளிகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அல்லு அர்ஜுன் வழக்கறிஞர்கள் மற்றும் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டறிந்தனர். இதையடுத்து, மாஜிஸ்திரேட், அல்லு அர்ஜுனை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டிருந்த நிலையில், ஹைதராபாத் உயர்நீதிமன்றம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தற்போது இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Read more: வாக்கிங் போனது ஒரு குத்தமா?? மனைவி தனியாக வாக்கிங் சென்றதால், கணவன் செய்த காரியம்..