தமிழரின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு.. உலகை திரும்பி பார்க்க வைத்த புரட்சி..!! வரலாறு ஒரு பார்வை..
பொங்கல் என்றாலே நம் அனைவருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தான் நினைவுக்கு வரும். தமிழகம் முழுவதுமே பொங்கல் பண்டிகை தொடங்கி பல மாதங்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியின் வரலாறு குறித்தும், அதன் முக்கியத்துவம் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு போட்டியாக மட்டுமல்லாமல் வீரம் மற்றும் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. காங்கேயம் காளை, புள்ளிகுளம் காளை ஆகிய மாடு இனங்கள் இதில் கலந்துக் கொள்கின்றன. இந்த காளைகள் சிறப்பான உணவு, உடற்பயிற்சியுடன் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன. இந்த காளைகளை அதன் உரிமையாளர்கள் தங்கள் வீட்டு பிள்ளைகளைப் போல பெருமையுடனும் சீருடனும் சிறப்புடனும் வளர்க்கின்றனர். இந்த ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அன்றும் இன்றும் என்றுமே இருக்கின்ற மவுசே தனி! இந்த காளைகளை உரிமையாளர்கள் விற்கும் சமயத்தில் நான், நீ என போட்டிப் போட்டுக் கொண்டு மக்கள் வாங்குகிறார்கள்.
விளையாட்டின் ஒரு பகுதியாக, காளையின் கொம்பில் தங்கம் பதிக்கப்பட்டு, ஓடும் காளையை பிடித்து, பட்டா எடுத்தவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு, பரிசு வழங்கப்படும். பல இடங்களில் காளைகளின் கொம்புகளில் 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அடக்கும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும்.
இந்தப் பழக்கம் பிற்காலத்தில் கைவிடப்பட்டு, அதற்கு பதிலாக வெற்றிப் பெரும் வீரர்களுக்கு பைக், தங்க நாணயம், மொபைல் போன், பணம் ஆகியவை பரிசாக அளிக்கப்படுகின்றன. இந்த பரிசுகள் ஒரு பக்கம் இருந்தாலும், இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதை இளைஞர்கள் பெருமையாக கருதுகிறார்கள். ஏறு தழுவுதல், ஏறு கோள், மாடுபிடித்தல், மஞ்சுவிரட்டு, பொல்லெருந்து பிடித்தல் என தமிழகத்தின் பல பகுதிகளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. கி.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறு தழுவுதல் வழக்கத்தில் இருந்ததாக பல வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜல்லிக்கட்டு புரட்சி : ஜல்லிக்கட்டு போட்டி விலங்குகளைத் துன்புறுத்துகிறது என்றும் இதனால் மாடுகளுக்கு காயங்களும் தேவையற்ற உயிரிழப்பும் ஏற்படுவதாகக் கருதி இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகள் 2008 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தனர். 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டின் ஆதரவாளர்களும் எதிர்ர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன. 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் பல நாட்களாக போராட்டங்கள் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்தியா முழுவதுமின்றி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் : ஜல்லிக்கட்டு என்றாலே மதுரை தான் என்று கூறும் அளவுக்கு அங்கு தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் அதிகமாக நடைபெறுகின்றன. அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. சிவகங்கை மாவட்டம் சிராவய்ல், அரளிப்பாறை, சிங்கம்புணரி, புதூர் போன்ற இடங்களிலும் புதுகோட்டை மாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.