DMK: ஜாபர் சாதிக் 2017-ம் ஆண்டே விடுவிப்பு...! தமிழக காவல்துறை கொடுத்த புதிய விளக்கம்...!
ஜாபர் சாதிக் 2017-ம் ஆண்டு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார், என்று சென்னைப் பெருநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்; சமீபத்தில் மத்திய போதை பொருள் தடுப்பு முனையத்தில் (NCB)வழக்கு பதிவு செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மீது சென்னை பெருநகர காவல் துறையில் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி பரவி வருகிறது. ஏற்கெனவே தெளிவுப்படுத்தப்பட்டுள்ளபடி ஜாபர் சாதிக் மீது சென்னை பெருநகர காவல் துறை, எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் (P-5) போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் (NDPS) சட்டத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஒரு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கிலிருந்து கடந்த 08.03.2017 அன்று நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை குற்றச்சாட்டு
கடந்த 2019 ஆம் ஆண்டு, 38.687 கிலோ கேட்டமின் (போதைப் பொருள் பயன்பாட்டுக்காக) மலேசியாவிற்கு கடத்தியதற்காக ஜாபர் சாதிக், அவரது சகோதரர் முகமது சலீம் மற்றும் சிலர், போதைப் பொருள்கள் மற்றும் மனநோய் மருந்துகள் சட்டத்தின் (NDPS சட்டம்) கீழ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இடம்பெற்ற ஜூகோ ஓவர்சீஸ் என்ற நிறுவனத்தின் பெயரில், கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜாபர் சாதிக் மற்றும் ஒரு பிரபல நபர், தமிழகத்தில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜாபர் சாதிக் தமிழகத்தை தங்கள் இருப்பிடமாக மாற்றி, தங்கள் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த திமுக தலைவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜாபர் போதைப்பொருள் கடத்தலுக்காகக் கைது செய்யப்பட்டதையும், 2019 ஆண்டு, போதைப்பொருள் கடத்தி, கைது செய்யப்படுவதில் இருந்து தப்பித்ததையும் பற்றித் தெரியாத திமுக அறிவிலிகளைப் போல, தமிழக மக்கள் முட்டாள்கள் இல்லை என கூறி இருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
ஜாபர் சாதிக் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் முழு விளக்கமளிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் ஆர்.எஸ்.பாரதியை வைத்து சம்பிரதாயத்துக்கு ஓர் அறிக்கையைக் கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்." என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.