”அது நான் இல்லை.. அட்மின் பார்த்த வேலையாக இருக்கலாம்”..!! சர்ச்சை வீடியோவுக்கு திருமாவளவன் விளக்கம்..!!
அடுத்த மாதம் 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்கு அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு திருமாவளவன் அழைத்து விடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. இந்த மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆட்சி, அதிகாரம் குறித்து தான் பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, பின்னர் அதை நீக்கியுள்ளார்.
இதனால், அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “ஆட்சியிலும் பங்கு… அதிகாரத்திலும் பங்கு… கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்!” என்று பதிவிட்டு அவர் பகிர்ந்த அந்த வீடியோவில், “கூட்டணி ஆட்சியில் பங்கு வேண்டும்; அதிகாரத்தில் அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று முதலில் வலியுறுத்தியது விசிக தான்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்த அவர், ”வீடியோ பதிவை அட்மின் வெளியிட்டு இருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியாது. அவரிடம் விசாரித்து சொல்கிறேன். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது நீண்டகாலமாக நாங்கள் வைக்கும் கோரிக்கைதான். புதிதாக எதையும் சொல்லவில்லை” என்று தெரிவித்தார்.
Read More : இந்திய சினிமாவுக்கு மிகச்சிறந்த பங்களிப்பு..!! நடிகை சமந்தாவுக்கு சிறந்த பெண்மணி விருது அறிவிப்பு..!!