’வாய் மொழியில் வித்தை காட்டுவது நம் வேலையல்ல’..!! ’இவர்கள் யாரும் மாநாட்டிற்கு வர வேண்டாம்’..!! விஜய் பரபரப்பு அறிக்கை..!!
'கர்ப்பிணியர், குழந்தைகள், நீண்ட காலமாக உடல் நலமின்றி இருப்போர், முதியோர் உள்ளிட்டோருக்கு நீண்ட துார பயணம், உடல் ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, அவர்கள் சிரமப்பட்டு தவெக மாநாட்டிற்கு வர வேண்டாம் என்று விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அரசியலை வெற்றி, தோல்விகளை மட்டுமே அடிப்படையாக வைத்து அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும், கொள்கை கொண்டாட்டமாகவும் அணுகப்போகும் அந்த தருணங்கள், மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும். அரசியல் களத்தில், வாய் மொழியில் வித்தை காட்டுவது நம் வேலையல்ல. நம்மை பொறுத்தவரை செயல்மொழி தான் அரசியலுக்கான தாய்மொழி.
மாநாட்டு களப்பணிகளில் மட்டுமின்றி, அரசியல் களப்பணிகளிலும், நாம் அரசியல்மயமானவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை, மக்கள் மத்தியில் தொண்டர்கள் உண்டாக்குவார்கள். உற்சாகமும், உண்மையான உணர்வும் தவழும் தொண்டர்கள் முகங்களை, மாநாட்டில் காணப்போகும் அந்த தருணங்களுக்காகவே, என் மனம் தவம் செய்து காத்துக் கிடக்கிறது.
கர்ப்பிணியர், குழந்தைகள், நீண்ட காலமாக உடல் நலமின்றி இருப்போர், முதியோர் பலரும் மாநாட்டிற்கு வர திட்டமிட்டு இருப்பர். அவர்களின் ஆவலை மிகவும் மதிக்கிறேன். மற்றவர்கள் எல்லாருடனும், அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல் எனக்கு இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும் விட அவர்களின் நலன் முக்கியம். மாநாட்டிற்காக நீண்ட தூர பயணம் செய்வது, அவர்களுக்கு உடல் ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தும்.
எனவே, அவர்கள் சிரமப்பட்டு மாநாட்டுக்கு வர வேண்டாம். ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தே, நம் வெற்றிக் கொள்கை திருவிழாவில் கலந்து கொள்ளலாம். மாநாட்டிற்கு வருவோர், பயண வழியில் அரசியல் ஒழுங்கையும், நெறிமுறைகளையும், போக்குவரத்து விதிகளையும் கடைப்பிடிக்க வேண்டும். பொறுப்புணர்வுடன், கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை காப்போம் என்பதை உணர்த்த வேண்டும். அப்போது தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கும் அது பொருந்தும். எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே நாம் இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.