உங்கள் Cellphone பாதுகாப்பானதா.?, அவை வெளியிடும் கதிர்வீச்சு அளவு என்ன.? இந்த நம்பரை டயல் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.!
நாம் இன்று இணையதள உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் வாழ்க்கையின் எல்லா படிநிலைகளிலும் இணையதளம் ஆக்கிரமித்து இருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் அந்த அளவிற்கு வளர்ந்துள்ளது. மேலும் நமக்கு ஒரு தகவல் தேவை என்றால் அதற்காக நாம் அதிக நேரம் செலவு செய்ய வேண்டிய தேவை இல்லை. இணையதளத்தில் சென்று தேடினாலே நமக்கான அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைத்து விடும்.
இன்று நம் கைகளில் இருக்கும் செல்போன் (cellphone) நமக்கு தகவல் தொடர்பு இணையதள வசதி மற்றும் பொழுதுபோக்கு என அனைத்தையும் நம் கைகளில் தருகிறது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போல் செல்போன்களுக்கும் நன்மை மற்றும் தீமைகள் என இரண்டு பக்கங்கள் இருக்கிறது. தகவல் தொடர்பு வசதிகள் இணையதளம் போன்றவை செல்போனில் நல்ல பக்கமாக இருந்தாலும் அவற்றில் இருந்து வெளியிடப்படும் கதிர்வீச்சு அதற்கு நேர் எதிர் பக்கமாக இருக்கிறது.
நம் செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு (radiation) நம் உடலுக்கு பல்வேறு விதமான தீமைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். செல்போன்களில் ஏற்படும் கதிர்வீச்சு அபாயத்தை கட்டுப்படுத்துவதற்கு அளவீடுகளும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நாம் ஒரு செல்போன் வாங்கும் போது கேமரா எப்படி இருக்கிறது டிஸ்ப்ளே எப்படி இருக்கிறது என்று பார்த்து வாங்கும் நாம் நம் நலனில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கதிர்வீச்சு எவ்வாறு இருக்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்கிறோமா என்றால் இல்லை.
அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கான அளவை நிர்ணயித்திருக்கிறது. இது SAR என குறிப்பிடப்படுகிறது மேலும் இந்த ஆணையத்தால் செல்போனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் வரம்பும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் போன் மூலம் அனுப்பப்படும் ரேடியோ கதிர்வீச்சின் அளவு நிர்ணயிக்கப்பட்ட எஸ்ஏஆர் அளவை விட அதிகமாக இருந்தால் அந்த செல்போன் நமது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
பொதுவாக ஸ்மார்ட் போன் தயாரிப்பாளர்கள் தங்களது செல்போனில் அட்டையின் மீது அதன் கதிர்வீச்சு அளவை குறிப்பிட்டு இருப்பார்கள். பொதுவாக செல்போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சின் அளவு 1.6 W/Kg என்ற அளவை தாண்டாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நமது செல்போன்கள் வெளியிடும் கதிர்வீச்சை தெரிந்து கொள்வதற்கு *#07#. என்ற எண்ணெய் டயல் செய்தால் நமது செல்போனின் கதிர்வீச்சு பற்றிய தகவல்கள் நமக்கு கிடைக்கும்.