உங்கள் குழந்தை சிறு வயதிலேயே பொய் பேசுகிறதா.? அதை கண்டுபிடிப்பது மற்றும் தடுப்பது எப்படி.?
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக வளர்ந்து ஊர் போற்றும் படி வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு பெற்றோரின் வளர்ப்பு மிக அவசியமாகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் விதமும் அவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் விஷயங்களும் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. குழந்தைகள் தங்களது சிறுவயதில் அறியாமையாலும் விளையாட்டாகவும் ஆரம்பிக்கும் ஒரு செயல் பொய் சொல்வது.
இதை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் நாளை அவர்கள் செய்யும் பெரிய தவறுகளுக்கும் இந்தப் பழக்கம் காரணமாகிவிடும். இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து அவர்களை நேர்வழிப்படுத்துவது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகள் பொய் சொல்வதை எப்படி கண்டுபிடிப்பது மற்றும் அவர்கள் பொய் சொல்வதை தவிர்க்க வைப்பது எப்படி என்று பார்ப்போம். பொதுவாக குழந்தைகள் பொய் சொல்லும் போது தங்கள் பெற்றோர்களின் கண்களை நேராக பார்த்து பேச மாட்டார்கள். இதிலிருந்து அவர்கள் பொய் பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடித்து விடலாம். இதை ஆரம்பத்திலே கவனிக்க தவறினால் அவர்கள் வளர்ந்த பின்பு கண்களை பார்த்தும் பொய் சொல்ல கற்றுக் கொள்வார்கள்.
குழந்தைகள் பொய் சொல்ல ஆரம்பிக்கும் போது சொன்ன ஒரு விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லி தாங்கள் கூறியது உண்மைதான் என நிரூபிக்க பார்ப்பார்கள். இது அவர்களை அறியாமலேயே நடக்கும் ஒன்று. அவர்கள் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்ற முடிவிற்கு நீங்கள் தாராளமாக வரலாம். இது போன்ற சமயங்களில் அவர்களது நடவடிக்கைகளிலும் மாற்றம் இருக்கும்.
பெரும்பாலான குழந்தைகள் தங்களது பெற்றோருக்கு பயந்தே பொய் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். ஏதேனும் ஒரு சிறு தவறு செய்திருப்பார்கள். அது தங்கள் பெற்றோருக்கு தெரிந்தால் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள் என கருதி பொய் சொல்ல தொடங்குகிறார்கள். எனவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சிறு தவறு செய்தால் அந்தத் தவறை அன்பாக எடுத்துக் கூறி சரி செய்ய வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் பொய் சொல்லும் பழக்கத்தை ஆரம்பத்திலேயே தடுக்கலாம்.