ரயிலில் அபாய சங்கிலி இழுத்த பெட்டியை இப்படித்தான் கண்டுபிடிக்கிறாங்களா..? பயணிகளே தெரிஞ்சிக்கோங்க..!!
நாட்டில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வைப்பது ரயில்வே துறைதான். தினசரி ஆயிரக்கணக்கான ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு பல்வேறு வசதிகளையும் ரயில்வே மேற்கொண்டு வருகிறது. மேலும், ரயில்களிலும் பயணிகளின் பாதுகாப்புக்காக பல்வேறு வசதிகள் உள்ளன. குறிப்பாக அவசர காலங்களில் எமர்ஜென்சி சங்கிலி கொடுக்கப்பட்டு இருக்கும்.
ரயில் நிலையத்தில் ஏதேனும் பயணிகளுக்கு அவசர தேவை ஏற்பட்டு ரயிலை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இந்த சங்கிலியை பிடித்து இழுத்தால் உடனடியாக ரயில் நிறுத்தப்படும். எந்தப் பெட்டியில் இருந்து சங்கிலி இழுக்கப்பட்டதோ அந்த பெட்டிக்கே அதிகாரிகள் நேரடியாக சென்று சங்கிலியை பிடித்து இழுத்ததற்கான காரணம் குறித்து விசாரிப்பார்கள். உரிய காரணம் இன்றி ரயில் நிறுத்தப்பட்டால் உடனடியாக அபராதமும் விதிப்பார்கள். மேலும், சிறைத்தண்டனையும் கூட விதிக்கப்படும்.
ஆனால், உங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்கும்.. சுமார் 20 பெட்டிகளுக்கு மேல் இருக்கும் ரயில்களில் எந்த பெட்டியில் இருந்து சங்கிலியை இழுத்தாலும் சரியான பெட்டிக்கு அதிகாரிகள் வந்து விடுகிறார்களே… அது எப்படி..? இந்த தொழில்நுட்பம் எப்படி இயங்குகிறது? என்று.. இதுகுறித்து ரயில்வேயில் என்ஜினியராக பணியாற்றுவதாக கூறிய அன்மேஷ் குமார் என்பவர் சோஷியல் மீடியாவில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், "இந்திய ரயில்வே 168 ஆண்டுகள் பழமையானது. அவ்வப்போது ரயில்வே பெட்டிகள், என்ஜின், பிரேக் சிஸ்டம் ஆகியவற்றில் அடிக்கடி மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல ரயில்வே சங்கிலியை பிடித்து இழுக்கும் போது எந்த பெட்டி என்பதை கண்டுபிடிப்பதிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது ரயில்களில் வேக்கம் பிரேக்குகள் கோச்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், மேல்புற கார்னரில் ஒரு வால்வு இருக்கும். பயணிகள் யாரேனும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தால் உடனடியாக அந்த வால்வு சுற்ற தொடங்கும்.
இந்த வால்வு உடனடியாக ரயிலின் டிரைவர் அல்லது உதவி ஓட்டுநருக்கு எந்த பெட்டியில் இருந்து செயின் இழுக்கப்பட்டுள்ளது என எச்சரிக்கை செய்யும். அதேபோல் பெட்டிகளில் எமெர்ஜென்சி பிளாஷ் லைட் இருக்கும். செயினை பிடித்து இழுத்தால் அந்த பிளாஷ் லைட் எரியும். செயினை ரயில்வே அதிகாரிகள் வந்து ரீசெட் செய்யும் வரை அந்த லைட் எரிந்து கொண்டே தான் இருக்கும். இது எந்த பெட்டியில் இந்த பிளாஷ் லைட் எரிந்துகொண்டு இருக்கிறதோ அதை வைத்து அதிகாரிகள் கண்டுபிடித்து விடுவார்கள்" என்று கூறியுள்ளார்.