உணவில் உப்பு கூடி விட்டதா?? இதை மட்டும் செய்தால் போதும்..
என்ன தான் நாம் தினமும் சமைத்தாலும், என்றோ ஒரு நாள் நம்மை அறியாமல் உணவில் உப்பு, காரம் என்று ஏதாவது ஒன்று கூடிவிடும், அல்லது குறைந்து விடும். குறைவாக இருந்தால் பிரச்சனை இல்லை, அதிகம் போட்டுக்கொள்ளலாம். ஆனால் அதிகம் இருந்து விட்டால்?? வீட்டில் போரே நடந்து விடும். இனி நீங்கள் அதை பற்றி கவலை பட வேண்டாம்.. உப்பு அதிகமாகிவிட்டால் என்ன செய்து அதை சரி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
குழம்பு, சாம்பார், கூட்டு, கிரேவி போன்ற திரவ வடிவ பதார்த்தங்களில் உப்பு அதிகமாக இருந்தால், வெங்காயம், கசகசா, புளிப்பில்லாத தக்காளி, துருவிய தேங்காய், பயத்தம்பருப்பு, முந்திரிப் பருப்பு முதயவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை லேசாக வதக்கி, மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதை குழம்பில் சேர்த்து ஒருமுறை கொதிக்க விடுங்கள். இப்படி செய்தால் உப்பு தேவையான அளவுக்கு மாறிவிடும். மேலும், பொட்டுக்கடலை மாவு, அல்லது சோள மாவு இருந்தாலும் அவற்றைப் பால் கரைத்து குழம்பில் சேர்த்தால் உப்பின் ருசி சரி ஆகிவிடும். வேக வைத்த உருளைக்கிழங்குத் துண்டுகளையும் போடலாம்
நீங்கள் செய்த ரசத்தில் உப்பு அதிகமாக இருந்தால், ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, ரசத்தைக் கொதிக்க விடுங்கள். பின்னர் மிளகு, சீரகத்தூள் போட்டு அரை மூடி எலுமிச்சம்பழம் பிழிந்து விடுங்கள். இப்படி செய்தால் ரசத்தில் உள்ள உப்பு சரி ஆகிவிடும்.
இட்லி-தோசை மாவில் உப்பு அதிகமானால், ஒரு கரண்டி ரவையை வெறும் வாணயில் வறுத்து, அதை ஐந்து நிமிடங்கள் பாலில் ஊற வைத்துவிடுங்கள். பின்னர் அதை மாவுடன் சேர்த்து விடுங்கள். இல்லையென்றால், இரண்டு கரண்டி அரிசி, அரைக் கரண்டி உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் மைய அரைத்து தோசை மாவில் சேர்த்து விட்டால் உப்பு சரியாகிவிடும்.
நீங்கள் செய்த பொரியலில் உப்பு அதிகமானால், தேங்காயைத் துருவிச் சேர்க்கலாம். அல்லது நான்கில் ஒரு பாகம் பொரியலை எடுத்து வடிகட்டியில் போட்டு, சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கழுவி விடுங்கள். பின்னர், அதை மீதமுள்ள முக்கால் பாகப் பொரியல் கலந்து ஒரு புரட்டு புரட்டி விட்டால் போதும்… உப்பு சுவை சரியான அளவுக்கு வந்துவிடும்.