தமிழ்நாட்டில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பா..? சென்னை வானிலை ஆய்வு மையம் வார்னிங்..!!
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (டிசம்பர் 21) விசாகப்பட்டினத்திற்கு (ஆந்திரா) தெற்கு-தென்கிழக்கே சுமார் 430 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு- வடகிழக்கே 480 கிமீ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது, அடுத்த 12 மணி நேரத்தில், கிழக்கு- வடகிழக்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மெதுவாக நகர்ந்து, கடலில் படிப்படியாக வழுவிழக்கக்கூடும். இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 23 மற்றும் 24ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 25ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.