தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா..? இயக்குனர் அமீரை வெளுத்து வாங்கிய ராஜேஸ்வரி பிரியா..!!
தமிழ்நாட்டில் வாழ்வதற்கே அச்சமாக உள்ளது என்று மக்கள் பயப்படும் அளவிற்கு மோசமான நிலையை திமுக ஆட்சி ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அத்துடன், திமுக அரசின் சட்டம் - ஒழுங்கு குறித்தும் பாமக உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருவதால், அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
திமுக அரசின் சட்டம் ஒழுங்கினை, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சமீபத்தில், அதாவது கடந்த மே மாதம் திமுகவின் 3 ஆண்டு கால சாதனைகளை, திமுகவினர் இணையத்தில் பட்டியலிட்டு பாராட்டி வந்தனர். அப்போதுகூட, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை , நாம் தமிழர் கட்சி சீமான் என பலரும் வரிசைக்கட்டி வந்து திமுகவை விமர்சித்தனர். அப்போது திமுக அரசு மீது இவர்கள் அனைவரும் வைத்திருந்த குற்றச்சாட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடுதான்.
இந்த வரிசையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி பிரியாவும் திமுகவை அப்போது விமர்சித்திருந்தார். "திமுக ஆட்சியில் சாதிய பிரச்சனைகள், லாக்கப் மரணங்கள், சட்டம் ஒழுங்கு சீரழிவு, போதைப் பொருள் விற்பனை, டாஸ்மாக் அவலங்கள், கனிம வளங்கள் கொள்ளை, லஞ்சம், அதிகார துஷ்பிரயோகம், விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, பத்திரப்பதிவு உயர்வு காரணமாக அல்லல் மிக்க வாழ்வை நடத்தி வருகின்றனர். 3 வருட கால ஆட்சி கொலைகள் அதிகமானதே சாட்சி" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "ஒரே நாளில் 3 அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. இனியாவது காவல்துறையை தட்டி எழுப்பி, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். அதை செய்ய முடியாவிட்டால், தமிழ்நாட்டில் கடந்த 2 மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும்" என்று ஆவேசத்துடன் கூறியிருக்கிறார்.
அந்த வரிசையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி நிறுவனத் தலைவர் ராஜேஸ்வரி மறுபடியும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சட்டம் ஒழுங்கு சீர்கேடு நாளுக்கு நாள் சீரழிந்து வருவது தமிழ்நாட்டின் பாதுகாப்பினை கேள்வி குறியாக்கியுள்ளது. கட்சி நிர்வாகிகள், மூதாட்டி, 10 வயது சிறுமி என இரண்டு நாட்களுக்குள் எத்தனை கொலைச் சம்பவங்கள். தமிழ்நாட்டில் வாழ்வதற்கே அச்சமாக உள்ளது என்று பொதுமக்கள் பயப்படும் அளவிற்கு மோசமான நிலையை திமுக ஆட்சி ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று பேசும் அமீர் (இயக்குனர்) போன்றவர்கள் சற்று அமைதியாக இருக்கவும், வெட்டிக்கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தாரின் மனநிலையை நினைத்து பாருங்கள். பிறகு உதயநிதி அவர்களுக்கும் திமுகவுக்கும் ஜால்ரா போடலாம்" என்று அறிக்கையின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார் ராஜேஸ்வரி பிரியா.
சமீபத்தில் இயக்குனர் அமீர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. சட்டம் ஒழுங்கு மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் சரியாக தான் உள்ளது. ஆளும் கட்சியை எதிர்த்து அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கை பற்றி மட்டுமே கூற முடியும்" என்று அமீர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Read More : ”தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசம்”..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!