இந்தியாவில் பரவியது சீன நிமோனியா?… மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கண்டறியப்பட்டதாக கூறப்படும் பாக்டீரியா பாதிப்புகள் சீனாவில் நிமோனியா நோயாளிகளின் சமீபத்திய அதிகரிப்புடன் தொடர்புடையவை என்று பரவும் செய்திகள் தவறானவை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அண்மையில் ஒரு தேசிய நாளிதழில் வெளியான செய்தி, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், சீனாவில் அண்மையில் அதிகமாக காணப்பட்ட நிமோனியா பரவலுடன் தொடர்புடைய ஏழு பாக்டீரியா பாதிப்புகள் கண்டறியப்பட்டதாக கூறியுள்ளது. இந்தச் செய்தி தவறானது என்பதுடன், அடிப்படையற்றதும் ஆகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா உட்பட உலகின் சில பகுதிகளில் காணப்படும் குழந்தைகளுக்கு ஏற்பட்ட சுவாச நோய்த்தொற்றுகளின் அதிகரிப்புக்கும், இந்த ஏழு பாதிப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆறு மாத காலத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் 2023 வரை) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடந்து வரும் ஆய்வின் ஒரு பகுதியாக இந்த ஏழு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
கடந்த ஜனவரி முதல் இன்று வரை, ஐ.சி.எம்.ஆரின் பல சுவாச நோய்க்கிருமி கண்காணிப்பின் ஒரு பகுதியாக டெல்லி எய்ம்ஸ் நுண்ணுயிரியல் துறையில் பரிசோதிக்கப்பட்ட 611 மாதிரிகளில் மைக்கோபிளாஸ்மா நிமோனியா கண்டறியப்படவில்லை, இதில் முக்கியமாக கடுமையான சுவாச நோய் நிகழ்நேர பி.சி.ஆர் மூலம் கண்டறியக்கூடியதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “மைக்கோபிளாஸ்மா நிமோனியா என்பது சமூகத்திடமிருந்து பரவும் நிமோனியாவின் பொதுவான பாக்டீரியாவால் ஏற்படுவதாகும். சுமார் 15-30% நோய்த்தொற்றுகளுக்கு இதுவே காரணம். இந்தியாவின் எந்தப் பகுதியிலும் செய்தியில் கூறப்பட்டுள்ளது போல, பரவல் பதிவாகவில்லை. மத்திய சுகாதார அமைச்சகம் மாநில சுகாதார அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளதுடன், தினசரி அடிப்படையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறது.” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.