தங்கம் விலை உயர்வுக்கு சீனா காரணமா? விலை குறைய வாய்ப்பில்லை?
அட்சய திருதியை நாள் அன்று (மே 10) தங்கம் விலை அதிகரித்த நிலையில், வரும் காலத்தில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பது குறித்து ஆனந்த் சீனிவாசன் விரிவாக பேசியுள்ளார்.
தங்கம் விலை அட்சய திருதியை நாளில் மட்டும் மூன்று முறை தங்கம் விலை அதிகரித்தது. மே 10ஆம் தேதி சென்னையில் தங்கம் விலை 155 ரூபாய் விலை உயர்ந்து 6,770 ரூபாய்க்கு விற்பனையானது. மே 11ஆம் தேதி ரூ.20 குறைந்து ரூ. 6,750க்கு விற்பனையானது. இருப்பினும், உள்ளூரில் மட்டுமின்றி உலகளவில் தங்கம் விலை அதிகரித்தது. தங்கம் விலை திடீரென இந்தளவுக்கு அதிகரிக்க அட்சய திருதியை தாண்டி என்ன காரணம்? வரும் காலத்தில் தங்கம் விலை குறையுமா? என்பது குறித்து பார்க்கலாம்.
அதாவது தங்கம் விலை சர்வதேச அளவிலும் உயர்ந்துள்ளதாம். சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தங்கம் வாங்குவதை அதிகரித்தே இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஆனந்த் சீனிவாசன் தெரிவித்தார். வரும் காலத்தில் தங்கம் விலை குறையுமா என்பதை விளக்கிய அவர், அனைத்து குடும்பங்களும் எந்தளவுக்குத் தங்கத்தை வாங்க வேண்டும் என்பதையும் எளிமையாக விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர். "தங்கம் விலை அட்சய திருதியை என்பதால் அதிகரித்தது. இந்தியாவில் தங்கம் விலை அதிகரிக்க அட்சய திருதியை காரணம். ஆனால், இந்தியாவைத் தாண்டி உலக அளவிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் தங்கம் விலை அதிகரிக்கச் சீனாவில் தங்கம் விற்பனை அதிகரித்தே காரணமாகும். சீன அரசும் கூட கடன் பத்திரங்களை விற்றுத் தங்கத்தை வாங்கி வருகிறார்கள். எனவே, ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தங்கத்திற்கு உலகளவில் நல்ல தேவை இருக்கிறது.
போட்டி போட்டு தங்கம் வாங்கும் நாடுகள்: இது ஒரு முரண்பாடான நிகழ்வு. ஏனென்றால் பொதுவாக டாலர் வலுவாக இருந்து அமெரிக்காவில் வட்டி விகிதமும் அதிகமாக இருந்தால் தங்கம் விலை குறையவே வேண்டும். ஆனால், சீனாவில் மக்கள் தங்கத்தை வாங்குவது, சீன அரசு, ரஷ்ய அரசு, துருக்கி அரசு தங்கத்தை அதிகளவில் வாங்குவது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை அதிகரிக்கிறது. இந்த நாடுகள் அமெரிக்கக் கடன் பத்திரங்களை விற்றுத் தங்கத்தை வாங்குகிறார்கள். இதுவே சர்வதேச அளவில் தங்கம் அதிகரிக்கக் காரணமாகும். அமெரிக்க மத்திய வங்கி இந்தாண்டு இறுதியில் தான் வட்டி விகிதத்தைக் குறைக்கும். இந்தாண்டு அதிகபட்சமாக ஓரிரு முறை மட்டுமே வட்டி விகிதத்தைக் குறைப்பார்கள். இதனால் பெரிய பாதிப்பு இருக்காது. அடுத்த ஆண்டு தான் வட்டி விகிதத்தைக் கணிசமாகக் குறைப்பார்கள். அப்போது தங்கம் விலை அதிகரிக்கும்.
புதிய டார்கெட்: ரூபாய் மதிப்பும் அழுத்தத்தில் இருக்கும். இதனால் தங்கம் நல்ல ஒரு சொத்தாக இருக்கும். உங்களிடம் 200 கிராம் தங்கம் இல்லை என்றால் உடனே அதை வாங்குங்கள். நான் முதலில் குறைந்தது 400 கிராம் தங்கம் வேண்டும் என்றேன். ஆனால், அப்போது தங்கம் விலை 3000 ரூபாயாக இருந்த நிலையில், இப்போது அது 7000 ரூபாய் அருகே சென்றுவிட்டது. இதனால் தான் டார்கெட்டை பாதியாகக் குறைத்துள்ளேன்.
தங்கத்தை எப்படி வாங்கலாம்: தங்கத்தை ஆபரணமாகவோ அல்லது நகையாகவோ தான் வாங்க வேண்டும் என்று இல்லை கோல்ட் பீஸ் ஆக கூட வாங்கலாம். அதைத் தேவைப்படும் போதும் விற்றும் கொள்ளலாம்" என்று ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Read More: PMO Modi | “மோடி தான் பாஜகவின் நிரந்தர பிரதமர்..” அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதிலடி.!!