"நிர்மலா சீதாராமனை பதவி விலகக் கோரிய வருவாய் துறை அதிகாரி சஸ்பெண்ட்.." ஓய்வு பெறுவதற்கு முன் பாய்ந்த நடவடிக்கை.!
சென்னையில் இந்திய வருவாய் சேவை துறையின் துணை ஆணையராக பணியாற்றிய பாலமுருகன் என்பவரை பணியிடை நீக்கம் செய்து இந்திய வருவாய்த்துறை உத்தரவிட்டிருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில் இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக வருவாய் துறை தெரிவித்திருக்கிறது.
சென்னை இந்திய வருவாய் துறையில் ஜிஎஸ்டி பிரிவு துணை ஆணையராக பணியாற்றி வருபவர் பாலமுருகன். இவர் சேலம் அருகே தலித் சமூகத்தைச் சார்ந்த இரண்டு ஏழை விவசாயிகளுக்கு ஜாதி பெயர் குறிப்பிட்டு சம்மன் அனுப்பப்பட்டது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் நிர்மலா சீதாராமன் மத்திய அமைச்சராக பதவியேற்ற பிறகு இந்திய வருவாய் துறை பிஜேபியின் அடியாட்கள் போல செயல்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும் இதற்கு காரணமான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில் பாலமுருகன் ஓய்வு பெறுவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக அவரை பணியிடை நீக்கம் செய்வதாக இந்திய வருவாய் துறை தெரிவித்திருக்கிறது. மேலும் ஒழுங்கு நடவடிக்கைகளின் அடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும் மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சார்பாக வருவாய் அதிகாரி பாலமுருகனின் மனைவி வாதாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.