மாலத்தீவு அதிபர் முய்சுவுக்கு அழைப்பு!... ஜூன் 9ல் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா!
Mohamed Muizzu: பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவிற்கு மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் பாஜக 240 இடங்களை கைப்பற்றி உள்ளது. ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை.
எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளை கைப்பற்றி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. பாஜகவின் 14 கூட்டணி கட்சிகளிடம் 53 எம்.பி.க்கள் உள்ளனர். குறிப்பாக, தெலுங்கு தேசத்திடம் 16, ஐக்கிய ஜனதா தளத்திடம் 12 எம்.பி.க்கள் உள்ளனர்.
இந்தநிலையில், இன்றுநடைபெறவுள்ள பாஜக, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் உட்பட கூட்டணி கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளார். இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 9-ம் தேதி மாலை பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்தநிலையில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ள நிலையில், விழாவில் பங்கேற்க உலக நாடுகளின் தலைவர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் சார்க் நாடுகளின் தலைவர்களுக்கும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேபோல், பதவியேற்பு விழாவிற்கு மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுக்கும் இந்தியா அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் வருகை தருவாரா இல்லையா என்பதை மாலைதீவு ஜனாதிபதியின் அலுவலகம் உறுதிப்படுத்தவில்லை. இருப்பினும், முய்ஸு புது டெல்லிக்கு விஜயம் செய்தால், அதுவே அவரது முதல் இந்தியா வருகையாக இருக்கும். மேலும் எந்தவொரு அதிபரும் பதவியேற்றால், அவர்கள் முதல் வெளிநாட்டுப் பயணமாக புதுடெல்லிக்கு வருவார்கள். இருப்பினும், முய்சு இந்தியாவுக்குச் வராமல், மாறாக சீனாவுக்குச் சென்று பல முக்கிய திட்டங்களை இறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: தேர்தலில் வெற்றிபெற்ற 504 வேட்பாளர்களும் கோடீஸ்வர்கள்!… ஏடிஆர் ஆய்வில் தகவல்!