சூப்பர்...! வாட்ஸ் அப் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகம்...! ஆனால் ஒன் கண்டிஷன்...
வாட்ஸ் அப் மூலம் எளிதாக மின் கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள மின்சார நுகர்வோர், அந்தந்த வட்டார மின்வாரிய அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது GooglePay, PhonePe போன்ற ஆன்லைன் கட்டணச் செயலிகள் மூலமாகவோ மின் கட்டணத்தை செலுத்தும் நடைமுறை இருந்து வருகிறது. இப்போது, அதை எளிதாக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம், தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலி மூலம் பயனர்கள் மின் கட்டணத்தைச் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இது 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக TANGEDCO வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இனி வாட்ஸ் அப் மூலம் மின்கட்டணத்தைச் செலுத்தலாம். 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர் இந்த வாட்ஸ்அப் எண்ணை 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, அது அதிகாரப்பூர்வ எண் என்பதைக் குறிக்கும் பச்சைக் குறியீடு உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மின் வாரியத்தில் பதிவு செய்துள்ள பயனீட்டாளர் எண்ணில் இருந்து அதிகாரப்பூர்வ எண்ணான 9498794987 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, அதன்பின்னர் மின் பயன்பாடு மற்றும் அதற்குரிய தொகையை அறிந்து, யுபிஐ பரிவர்த்தனை மூலம் மின்கட்டணத்தை செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.