விண்ணில் பாய்கிறது இன்சாட் - 3DS செயற்கைக்கோள்..!! இன்று கவுண்டவுன் தொடக்கம்..!! இது என்ன செய்யும் தெரியுமா..?
நாளை விண்ணில் ஏவப்படும் இன்சாட் - 3DS செயற்கைக்கோள் கவுன்டவுன் இன்று மாலை தொடங்கப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாளை பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு வானிலையை ஆராய்ச்சி செய்வதற்காக INSAT - 3DS என்கிற செயற்கைக்கோள் சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து GSLV - F 14 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. இதற்காக இஸ்ரோவின் அதிநவீனமான ஜி.எஸ்.எல்.வி வகை ராக்கெட் பயன்படுத்தப்பட உள்ளது. 51.7 மீட்டர் உயரமும் 420 டன் எடையும் கொண்ட இந்த ராக்கெட்டின் 16-வது பயணம் இது. மேலும், INSAT- 3DS செயற்கைக்கோளை பொறுத்தவரை 2,274 கிலோ எடை கொண்டதாகும். பூமியிலிருந்து 253 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புவி தாழ்மண்டல சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படவுள்ளது.
இந்த செயற்கைக்கோளின் பணி இந்தியாவை சுற்றி இருக்கக்கூடிய கடற்பரப்பில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் குறித்து கண்காணிப்பது, வளிமண்டலத்தில் ஏற்படக்கூடிய அழுத்த வேறுபாடுகள் குறித்து தரவுகளை வானிலை மையத்திற்கு தருவது மற்றும் கடலில் தொலைந்து போகும் மீனவர்களை தேடும் பணியில் உதவிகரமாக இருப்பது மற்றும் பேரிடர்களை முன்கூட்டியே கண்டறிவது ஆகிய பணிக்காக உதவும் என்று கூறப்படுகிறது. இந்தப் பணிகளுக்காக இந்த செயற்கைக்கோளில் 6 சேனல் இமேஜஸர், 19 சேனல் சரௌண்டர், டேட்டா ரிலே டிரான்ஸ்பான்டர், சாட்டிலைட் எடிட் சர்ச் ரெஸ்க்யூ ட்ரான்ஸ்பான்டர் ஆகிய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மற்றும் 2024ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் சென்னை மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் எதிர்பாராத விதமான அதி கனழை பெய்து பொதுமக்கள் அதிகளவு பாதிக்கப்பட்ட போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் சரியான தரவுகள் அரசுக்கு வழங்கப்படவில்லை என்கிற குற்றச்சாட்டு பரவலாக எழுந்த நிலையில், தற்போது வானிலையை மேலும் துல்லியமாக கணிப்பதற்காக இந்த INSAT- 3DS செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுவது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.