"சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை துவங்குங்கள்" ; அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை ஜூன் மாதம் முதல் துவங்க வேண்டும்" என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம், 2018-ம் ஆண்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சதுப்பு நிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஜூன் மாதம் முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், சதுப்பு நிலங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், மாவட்டங்களில் உள்ள சதுப்பு நிலங்களை அடையாளம் காணும் பணி குறித்து அவ்வப்போது அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இப்பணிகளுக்காக நிபுணர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ள அரசுக்கு அனுமதியளித்து, வழக்கின் விசாரணையை ஜூலை முதல் வாரத்திற்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.