இந்தியாவின் விசில் கிராமம்!. இங்க யாருக்கும் பெயரே இல்லையாம்!. தனித்தனி டியூன் மூலம் பேசிக்கொள்ளும் மக்கள்!. அதிசய வரலாறு!
Whistling village: உலகில் பல கிராமங்கள் மற்றும் நகரங்கள் உள்ளன, அவை அவற்றின் சிறப்புக்காக அறியப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கிராமம் உள்ளது, அது அதன் தனித்துவமான பாணிக்கு பெயர் பெற்றது. அதுபோல உலகில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் அவரவர் பெயர் உள்ளது, அதன் மூலம் மக்கள் அவரை அழைக்கிறார்கள். மக்கள் அவர்களின் பெற்றோர்கள் வைத்த பெயரால் அடையாளம் காணப்படுகிறார்கள், ஆனால் இந்தியாவின் உள்ள இந்த கிராமத்தில், மக்கள் பெயரால் அழைக்கப்படுவதில்லை, மாறாக ஒரு டியூன் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
மேகாலயாவில் உள்ள இந்த காங்தாங் கிராமத்தில் தாய், தந்தை, குழந்தைகள் மற்றும் உறவினர் உள்ளிட்ட அனைவருமே ஒருவருக்கொருவர் விசில் சத்தம் மூலமாகவே அழைத்துகொள்கின்றனர். அவர்களின் உரையாடலும் பெரும்பாலும் இசை வடிவிலேயே இருக்கிறது. இதைபோல தமிழ் சினிமாவிலும் ஒரிரு திரைப்படங்களில் காட்சிகள் அமைந்திருக்கும்.
குறிப்பாக, ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படக் காட்சி நினைவிருக்கிறதா? கதையின் நாயகர்களை அறிமுகப்படுத்தும் காட்சியில், சூர்யா, ஜோதிகா அவர்களது குழந்தை என மூவரும் விசிலடித்துக்கொண்டு தான் பேசிக்கொள்வார்கள். இதைபோல, நடிகர் ஜெயம்ரவியின் ‘பேராண்மை’திரைப்படத்திலும் சில காட்சிகள் அமைந்திருக்கும். அப்படி தான் இந்த கிராமத்தில் இருப்பவர்களும் பேசிக் கொள்வார்களாம். பெயர் சொல்லி ஒருவரை ஒருவர் கூப்பிட்டுக் கொள்வதே இங்கு அரிது தானாம்.
பழங்குடியினர் வசித்து வரும் இந்த கிராமத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், குழந்தையின் தாய் பெயரோடு சேர்த்து ஒரு இசையையும் பெயராக சூட்டுவார். மேலும், இந்த கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு இரண்டு பெயர்கள் இருக்கும். அதில் ஒன்று வழக்கமாக நமக்கு வைக்கப்படும் பெயர்கள், மற்றொன்று இசைப் பெயர். இந்த இசைப்பெயரிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒரு ஷார்ட் சாங், மற்றொன்று லாங் சாங். இந்த ஷார்ட் சாங் வீட்டிலிருப்பவர்கள் அழைப்பதற்காக, லாங் சாங் ஊரார் பயன்பாட்டிற்காகவாம்.
இந்த இசையை இவர்கள் ’ஜிங்கர்வை லாபெய்’ என்று அழைக்கிறார்கள். இது ’அம்மாவின் அன்பு பாடல்’ என்று பொருள்படுகிறது. ஒரு மனிதர் இறக்கும்போது அந்த இசைக்குறிப்பும் அழிந்துவிடும், அந்த இசை வேறு எவருக்கும் பெயராக சூட்டப்படுவதில்லை. பல தலைமுறைகளாகவே இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருவதாக கூறும் கிராமவாசிகள், இது எப்போது என்ன காரணத்திற்காக தொடங்கப்பட்டது என்பது தெரியவில்லை, ஆனால் இது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது எனக் கூறுகின்றனர்.
சிறந்த சுற்றுலா கிராம விருதை கடந்த 2022ம் ஆண்டு சுற்றுலா அமைச்சகம் காங்தாங் கிராமத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. வயல்வெளிகளில், காடுகளில் வேலைபார்க்கும்போது பொதுமக்கள் அசதி தெரியாமல் இருக்க பாட்டு பாடுவது வழக்கம். ஆனால் இந்த கிராமத்தில் இருப்பவர்கள் இயல்பாக பேசிக்கொள்வதே பாட்டுபாடி தான் என்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
Readmore: உஷார்!. BP மாத்திரைகளை உட்கொள்கிறீர்களா?. இந்த மருந்துகள் ஆபத்தானவை!. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!