கிராண்ட் பிரீ மல்யுத்தம் | தங்கம் வென்று வினேஷ் போகட் அசத்தல்!!
ஸ்பெயினில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ மல்யுத்த போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகாட் தங்கப் பதக்கம் வென்றாா்.
2024 பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டி தொடங்க இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், உலக நாடுகளின் முன்னணி வீரர், வீராங்கனைகள் இறுதிக் கட்ட தயாரிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு முன்னோட்டமாக பல சர்வதேச தொடர்களில் அவர்கள் விளையாடி பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்தியாவை பொருத்தவரை பதக்கம் வெல்ல வாய்ப்புகள் கொண்ட ஒரு விளையாட்டாக மல்யுத்த போட்டிகள் உள்ளன. பாரீஸ் ஒலிம்பிக்கிஸ் போட்டியில் மல்யுத்த பிரிவில் பங்கேற்க 6 இந்தியர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதில் ஆடவர் பிரிவில் ஒரு வீரர், பெண்கள் பிரிவில் 5 வீராங்கனைகள் அடங்கும்.
தங்கம் வென்று வினேஷ் போகாட் அசத்தல்
இதில் மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இவர் பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு முன்னோட்டமாக ஸ்பெனின் நாட்டில் நடைபெற்ற ஸ்பானிஷ் கிராண்ட் பிக்ஸ் தொடரில் பங்கேற்றார். மகளிருக்கான 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவா், இறுதிச்சுற்றில் 10-5 என்ற கணக்கில் ரஷியாவைச் சோ்ந்த மரியா டியுமெரிகோவாவை வீழ்த்தினாா். முன்னதாக அவா், முதல் 3 சுற்றுகளில் எளிதான வெற்றிகள் கண்டாா்.
முதலில், அமெரிக்காவின் யுஸ்னெலிஸ் கஸ்மனை 12-4 என வென்ற வினேஷ், அடுத்து காலிறுதியில் கனடாவின் மேடிசன் பாா்க்ஸை 'வின் பை ஃபால்' முறையில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றாா். அதில் மற்றொரு கனடா வீராங்கனையான கேட்டி டட்சாக்கை 9-4 என சாய்த்து இறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஸ்பெயினில் பயிற்சி மற்றும் போட்டியை நிறைவு செய்திருக்கும் வினேஷ், அடுத்ததாக பாரீஸ் ஒலிம்பிக் போட்டி, மற்றும் அதற்கான தயாா்நிலைக்காக பிரான்ஸ் செல்கிறாா். நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் உலக சாம்பியன்ஷிப் போட்டி, ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் வெண்கலம் வென்றவர் ஆவார். இவர் தற்போது பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் செய்து அங்கு ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்காக 20 நாள் பயிற்சி மேற்கொள்ளவுள்ளார்.