2035-ம் ஆண்டில் இந்தியாவுக்கு சொந்தமாக விண்வெளி நிலையம்... "பாரதிய விண்வெளி நிலையம்" என பெயர்...!
2035 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சொந்தமாக விண்வெளி நிலையம் இருக்கும், இது "பாரதிய விண்வெளி நிலையம்" என்று அழைக்கப்படும்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), உயிரி தொழில் நுட்பத்துறை இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதாக அறிவித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்; பாரதிய விண்வெளி நிலையத்தை நிறுவுதல் மற்றும் பயோ ஈ3 (பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்புக்கான உயிரி தொழில்நுட்பம்) கொள்கையை வெளியிடுதல் உள்ளிட்ட பல முக்கிய முன்முயற்சிகளை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கோடிட்டுக் காட்டுகிறது. 2030 ஆம் ஆண்டளவில் 300 பில்லியன் டாலர் உயிரி பொருளாதாரத்தை அடையும் இலக்குடன், நாட்டில் உயர் செயல்திறன் கொண்ட உயிரி உற்பத்தியை வளர்ப்பதை இந்தக் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒத்துழைப்பு மைக்ரோ கிராவிட்டி ஆராய்ச்சி, விண்வெளி உயிரி தொழில்நுட்பம், விண்வெளி உயிரி உற்பத்தி, உயிரி விண்வெளி மற்றும் விண்வெளி உயிரியல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும்.
இந்தக் கூட்டாண்மை தேசிய மனித விண்வெளி திட்டத்திற்கு பயனளிப்பதுடன், மனித சுகாதார ஆராய்ச்சி, புதிய மருந்துகள், மீளுருவாக்கம் செய்யும் மருத்துவம் மற்றும் திறமையான கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சிக்கான உயிரி அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் புதுமைகளை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறைகளில் தொடக்க நிலை நிறுவனங்களுக்கு வணிக ரீதியாக கவர்ச்சிகரமான தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் இது திறக்கும்.
உயிரி விண்வெளி மற்றும் விண்வெளி உயிரியலில் ஒரு புதிய சகாப்தத்தை கற்பனை செய்த அவர், இந்த ஒத்துழைப்பு இந்தியாவுக்கு மட்டுமின்றி, உலகத்துக்கே பயனளிக்கும் வகையில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை எடுத்துரைத்தார். இஸ்ரோ மற்றும் உயிரி தொழில்நுட்ப துறைக்கு இடையிலான இந்த வரலாற்று கூட்டாண்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றங்களுக்கு வழி வகுக்கும், கண்டுபிடிப்புகளில் உலகளாவிய தலைவராக இந்தியாவின் நிலையை வலுப்படுத்தும். 2035 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு சொந்தமாக விண்வெளி நிலையம் இருக்கும், இது "பாரதிய விண்வெளி நிலையம்" என அழைக்கப்படும் என்றார்.