Ind vs Aus| சிட்னி டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வி!. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை இழந்தது!. ரசிகர்கள் சோகம்!.
சிட்னியில், பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 5 வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'பார்டர் - கவாஸ்கர்' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில், தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. இதையடுத்து, நான்காவது டெஸ்ட் (பாக்சிங் டே) மெல்போர்னில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 474 ரன் எடுத்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 369 ரன் எடுத்தது. 105 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, 4வது நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுக்கு 228 ரன் எடுத்து, 333 ரன் முன்னிலை பெற்றிருந்தது. 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று (டிச.,30) நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 234 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது.
340 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 155 ரன்னுக்கு ஆல்அவுட் ஆகி, 184 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து, 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் ஜனவரி 3ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட், 3-1 என ஆஸ்திரேலியே கைப்பற்றியது. சுமார் 11 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வசப்படுத்தியுள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.
சிட்னி டெஸ்ட் தோல்வியால் இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. முன்னதாக, கடந்த 2021 மற்றும் 2023ம் ஆண்டுகளில் நடைபெற்ற, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. இதனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, முதல்முறையாக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிப்போட்டிக்கு கூட இந்திய அணி தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.